வங்கிகளில் மோசடி செய்து 51 பேர் தப்பியோட்டம்! - அமைச்சர் தகவல்!
இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பித்தவர்கள் 51 பேர் என நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் பலர் போக்கு காட்டி வருகிறார்கள். சமீபத்தில் தொழிலதிபர் நீரவ் மோடி பல கோடிகள் பஞ்சாப் வங்கியில் கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் தப்பி ஓடினார். லண்டனில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் ‘இந்திய வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் 51 பேர் என தெரிவித்துள்ளார். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 694 வழக்குகள் போடப்பட்டு 13 பேர் தண்டனை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கடன் பெற்று தப்பித்தவர்கள் மொத்தம் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை திரும்ப கொண்டு வரவும் அரசு முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.