திமிறிக் கொண்டு தாக்கிய யானையை அடக்கிய பாகன்
குதிரையைக் கண்டு மிரண்டு ஓடிய யானை, அடக்கச் சென்ற பாகனையும் தாக்கியது. ஆனாலும், தைரியமாக சென்று யானையை பாகன் அடக்கினார்.
திருவனந்தபுரம் கோவளத்தை அடுத்த பூவார் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியாருக்கு சொந்தமான யானையை 2 பாகன்கள் ஆற்றில் குளிப்பாட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது யானையின் எதிரே ஒருவர் குதிரையுடன் வந்து கொண்டிருந்தார்.
யானையின் அருகே குதிரை வந்தபோது, அதனை பார்த்து மிரண்ட யானை திடீரென பயங்கரமாக பிளிறியப்படி சாலையில் ஓடத் தொடங்கியது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
பிறகு, அந்த யானை சாலையிலிருந்து இறங்கி, அருகில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஓடியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனே அங்கிருந்த யானை பாகன்கள் சுபீசும், அசோகனும் கைகளில் இரும்பு சங்கிலியுடன் அந்த யானையை அடக்க விரட்டிச்சென்றனர்.
அப்போது சுபீஷ் யானை மீது தாவி ஏறி அதை அடக்க முயன்றார். ஆனால், கோபத்தின் உச்சியில் இருந்த அந்த யானை சுபீசை தூக்கி கீழே வீசியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் சுபீஷ் தைரியமாக சென்று அந்த யானையை அடக்கி ஒரு தோட்டத்தில் இருந்த மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டார்.