லாரி மீது மோதிய மினி வேன்.. வேனில் இருந்த கட்டுக்கட்டான பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா என்ற பகுதியில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மினி வேனில் மூட்டை மூட்டையாக இருந்த கோடிக்கணக்கான பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படையினர் கெடுபிடி அதிகமாக உள்ளது என்பதும் 50 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பணம் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு மினி வேனில் மூட்டை மூட்டையாக 7 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த வேனை பறக்கும் படையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்ற போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான மினி வேன் கவிழ்ந்த நிலையில் அதிலிருந்து மூட்டை மூட்டையான பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பணத்தை கொண்டு சென்ற மினி வேன் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
உரிய ஆவணம் என்று 7 கோடி ரூபாய் பணத்தை கொண்டு சென்றதை எடுத்து அந்த பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு ஏழு கோடி ரூபாய் பணம் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran