சொம்பு ஏந்தி கர்நாடக முதல்வர் போராட்டம்.! நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்..!
கர்நாடக மாநிலத்திற்கு உரிய வறட்சி நிவாரண நிதியை வழங்கவில்லை எனக் கூறி அம்மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் சொம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு உடனடியாக நிதியை ஒதுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், நேற்று ரூ.3,500 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி, பெங்களூரு விதான் சவுதா சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கர்நாடக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.