செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2024 (17:17 IST)

மகளிர் உதவித்தொகை ரூ.2100 ஆக உயர்த்தப்படும்: அதிரடி அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி..!

மகளிர் உதவித்தொகை தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.2100 என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு தமிழகத்தில் அல்ல, டெல்லியில் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  மகளிருக்கு   ரூ.2100 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 31 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும் என்றும், இதற்கான பதிவு நாளை முதல் தொடங்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் உடனடியாக பணம் டெபாசிட் ஆகாது என்றும், தேர்தல் தேதி அடுத்த 10 முதல் 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்பதால், தேர்தலுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் மாதம் ரூ.1,000 போதாது என்று சில பெண்கள் கூறியதாகவும், அதனால் அனைத்து பெண்களுக்கும் ரூ.2100 டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு தாய்மார்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva