டிரம்ப் வெற்றி எதிரொலி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்காவின் டாலர் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு வெற்றி பெற்றதையடுத்து, இந்தியா உள்பட ஆசியாவின் பங்கு சந்தைகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் அரசு செலவினங்களுக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளது, எனவே அமெரிக்க நிதிப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்றும் அமெரிக்க பொருளாதாரம் உயர்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அமெரிக்க டாலர் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளின் நாணய மதிப்புகள் குறைந்துள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு 84.18 என குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், மெக்சிகோ நாட்டின் பேசோ, ஜப்பான் யென், யூரோ உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பை சரி செய்ய அன்னிய செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran