வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (06:06 IST)

கமல், ரஜினியை நம்பி காங்கிரஸ் இல்லை. குஷ்பு

நடிகர் கமல்ஹாசனை நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்த பின்னர் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசனை தங்கள் கட்சியில் இழுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரித்த விலை வீணாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் எதிரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் கமல், ரஜினியை நம்பி காங்கிரஸ் இல்லை என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே கேரள முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். தற்போது டெல்லி முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். ஒரு முதல்–மந்திரியே அவரை தேடிப்போய் சந்தித்து இருப்பதால், கமல்ஹாசனின் 30 ஆண்டுகால தோழி என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
 
கமல்ஹாசன் பிற கட்சியில் சேருவதும், புதிய கட்சி தொடங்குவதும் அவரது விருப்பம். காங்கிரசுக்கு வாருங்கள் என்று அவரை நாங்கள் கூப்பிட மாட்டோம். குஷ்புவை நம்பியோ, கமலை நம்பியோ, ரஜினிகாந்தை நம்பியோ காங்கிரஸ் இல்லை. தனது கொள்கையை நம்பித்தான் இருக்கிறது.
 
கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் நான் சேரமாட்டேன். அரசியலே வேண்டாம் என்று விலகினாலும், விலகுவேனே தவிர, இனி வேறு கட்சியில் சேர மாட்டேன். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் எனது நிலைப்பாடு அதுதான். அரசியலில்தான் பேரும், புகழும் நான் அடைய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பணம், புகழ் எல்லாவற்றையும் பார்த்தவள் நான். இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.