கொரோனா வைரஸால் ஐடி நிறுவனம் மூடப்படவில்லை – அதிகாரிகள் விளக்கம்!
ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் எந்த ஐடி நிறுவனமும் மூடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஹைதராபாத் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களை வீட்டிலிருந்து பண்புரிய ஐடி நிறுவனம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இது வெறும் வதந்திதான் என கூறியுள்ள ஐடி அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டதாகவும், ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக புனே அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஐடி பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியாகவில்லை. அப்படி உறுதியாகும் பட்சத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார். மேலும் அவருடன் பழகிய நண்பர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இதனால் ஐடி நிறுவனங்கள் மூடப்படாது எனவும், பாதிக்கப்படுபவர்கள் தவிர மற்றவர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார்.