வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (08:46 IST)

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகளில் சுகாதார வசதியை அதிகரிக்க முடிவு!

இந்தியாவில் சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சுகாதார வசதியை அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 28 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத் ஐடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை போதுமான வரை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சிறுவர்களையும், முதியவர்களையும் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்த்தல், தும்மும்போது, இருமும்போது கர்சீப் அல்லது டிஷ்யூ பயன்படுத்துதல் போன்ற சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் சுகாதாரத்தையும் உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்கள் தேர்வுக்கு மாஸ்க் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ள அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.