தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் எத்தனை.? - விவரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்.!!
தமிழக அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் நிலுவைகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அமைச்சர்கள் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ஒராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணிச் சுமை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு விசாரணையை விரைவாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
மேலும் தமிழக அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் நிலுவைகள் உள்ளன? என்றும் அது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.