செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:57 IST)

வாயை திறந்து பேசுங்கள் மோடி : 637 கல்வியாளர்கள் கடிதம்

இந்தியாவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து ஏன் வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறீர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  
 
ஆனால், இந்த சம்பவங்களை ஆதரிப்பது போல், பாஜகவினர் கூறிய கருத்துகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் கூறிய கருத்துகளும் சமீபத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாஜகவினர் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளையே கூறி வருகின்றனர் என்கிற எண்ணம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற 637 கல்லூரிகளில் இருந்து பல கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அதில் கையொப்பம் இட்டுள்ளனர்.  அதில் சிறுமிகள்  மீதான பாலியல் பலாத்காரங்கள் குறித்து நீங்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நீங்கள் உறுதியளிக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது என அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், பெண்களுக்கு எதிராக உங்கள் கட்சியினர் புரியும் குற்றங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசுவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் குறித்து நீங்கள் பேசுவதில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுகிறது. குற்றம் செய்யும் அனைவரும் பாஜகவுடன் தொர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, மவுனத்தை கலைத்து பேசுங்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  
 
ஏற்கனவே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மோடியின் மௌனத்தை கண்டித்து கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது 600க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.