ஜெயநகர் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின்போது பாஜக வேட்பாளர் விஜயகுமார் மறைவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெயநகர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தது.
முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி முன்னிலை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செளமியா ரெட்டி, பாஜக வேட்பாளர் பிராஹலாத்தை விட 3775 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். இந்த தொகுதியில் செளமியா ரெட்டி 54,457 வாக்குகளும், பிராஹலாத் 51,568 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்று ஜெயநகர். ஆனால் இந்த தொகுதியிலேயே அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.