1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (17:37 IST)

பிரதமர் மோடி மீது குவியும் புகார்..! தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு.!

Modi Congress
சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
 
ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள் என்றும் இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 
 
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா? என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். மேலும், பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர்.


சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.