ஜெயலலிதாவை மிஞ்சிய சித்தராமய்யா: ஒரே நாளில் 14 விக்கெட்டுகளை வீழ்திய கர்நாடக முதல்வர்
கர்நாடக சட்டசபையில் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா. நேற்று ஒரே நாளில் 14 அமைச்சர்களை மாற்றி, 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
கர்நாடகாவின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் 13 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவி பிராமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா 20 நிமிடங்களில் முடிவடைந்தது.
பொதுவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அமைச்சரவையை மாற்றி அமைப்பார், அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால் அவர்களை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார். ஆனால் ஒரே நாளில் 14 அமைச்சர்களை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மக்களவை காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சர்கள் டி.பி.ஜெயசந்திரா, கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், ராமலிங்கரெட்டி, கிருஷ்ணபைரே கௌடா, தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவ், கர்நாடக காவல்துறை தலைவர் ஓம்பிரகாஷ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் மேகரிக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் புதிய அமைச்சர்களுடன் சட்டமன்ற வளாகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்திய சித்தராமய்யா சிறப்பாக செயல்படுமாறும், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.