1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:56 IST)

சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்!

ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள சமயத்தில் சிபிஎஸ்சி கல்வித்திட்ட தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மறுதேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி சிபிஎஸ்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் நடைபெறாது. குறிப்பிட்ட சில பாடங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மட்டுமே தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாணவர்கள் வீடுகளில் பெற்றோர்களால் தொடர்ந்து படிக்க கட்டாயப்படுத்தப்படுவது மற்றும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்டவற்றால் மன உளைச்சல் அடைவது குறித்து காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “மாணவர்களை தொடர்ந்து படிக்கும்படி பெற்றோர்கள் வற்புறுத்த வேண்டாம். குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அதே சமயம் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களை படிக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்வு கால அட்டவணை ஊரடங்கு முடிந்த பின்பு அறிவிக்கப்படும் என்றும் தேர்வு இல்லாத பாடங்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண்கள் தகுதியாக ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.