புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (15:16 IST)

தகவல் தரலைனா சிறை, சுதந்திரத்திற்கும் எல்லை உண்டு! – ஓடிடி, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய, அமைதியை குலைக்கக்கூடிய பதிவுகள் இடப்படுவது, ஓடிடி தளங்களில் சர்ச்சைக்குரிய தொடர்கள் ஒளிபரப்பாவது குறித்து பல நாட்களாக பலர் புகார் அளித்து வந்த நிலையில் மத்திய அரசு இன்று அதற்கான கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவேடகர் ஆகியோர் விதிமுறைகளை வெளியிட்டனர். அதன்படி இந்தியாவில் வாட்ஸப் பயன்படுத்துவோர் 53 கோடி, யூட்யூப் பயனாளர்கள் 44.8 கோடி, பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, ட்விட்டர் 1.7 கோடி.

இந்த தளங்களில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சமூக வலைதளமும் புகார்களை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு புகார்கள் வந்துள்ளன என்பது குறித்து விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.

ஒரு தவறான தகவல் பரவினால் அதை முதன்முதலில் பரப்பியவரை வலைதளங்கள் கண்டறிய வேண்டும். இதுதவிர அரசு, நீதிமன்றம் கேட்கும் தகவல்களை சமூக வலைதளங்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஓடிடி தளங்களை பொறுத்தவரை தற்போதைக்கு திரைப்படங்கள், வெப்சிரீஸ்க்கு 13, 16, 18+ என வகைப்படுத்திகாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான கட்டுப்பாடுகள் ஓடிடிகளுக்கு அவசியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.