முதல்வர் ஐயா அவங்களை சும்மா விடாதீங்க! – கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை!
ஆந்திராவில் வியாபாரி ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வியாபாரி வர்மா. இவர் கடந்த 2010ம் ஆண்டு தொழில்ரீதியாக பைனான்சியர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் அதை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
எனினும் கடன் தொகை நிலுவை உள்ளதாக பைனான்சியர் வர்மாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததுடன், அடிக்கடி வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த வர்மா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் வர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வர்மா எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வர்மா எழுதியுள்ள அந்த கடிதத்தில் தனது இக்கட்டான நிலை குறித்து உருக்கமாக எழுதியுள்ளார். மேலும், பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.