ரயிலில் மசாஜ் திட்டம் தேவையா? ரயில்வே அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக எம்பி
ரயில்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும் வகையில் ரயில்வே துறை அவ்வப்போது அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வருகிறது
ஆனால் இந்த திட்டத்திற்கு பாஜக எம்பி சங்கர் லால்வாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியபோது, 'ரயிலில் மசாஜ் திட்டம் என்பது நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராது. பெண் பயணிகளுக்கு முன் ஆண்களுக்கு மசாஜ், ஆண் பயணிகளுக்கு முன் பெண்களுக்கு மசாஜ் என்பது தேவையற்றது. இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதற்கு பதிலாக ரயிலில் மருத்துவ வசதி, முதலுதவி வசதி, நூலக வசதி போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.
ரயிலில் மசாஜ் சேவை வழங்குவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் சமூக ஆர்வலர்கள் சங்கர் லால்வாணி கருத்தை வரவேற்றுள்ளனர். ஏற்கனவே மசாஜ் சேவை நிலையத்தில் பல்வேறு பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் ரயிலில் அது தேவையற்றது என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.