அதிமுகவும் வேண்டாம், ரஜினியும் வேண்டாம்: பாஜகவின் மெகா பிளான்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜகவை வளர்த்துவிட வேண்டும் என்று பாஜக தலைமை குறிப்பாக அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம். தமிழகத்தில் பாஜக வளராததற்கு முக்கிய காரணம், சரியான தலைவர்கள் இல்லை. இருக்கும் தலைவர்களும் மக்களை வெறுப்படையும் வகையில் பேசி எரிச்சலாக்குகின்றனர் என்ற ரிப்போர்ட் அமித்ஷாவுக்கு சென்றுள்ளதாகவும், எனவே தமிழக பாஜகவை புத்துணர்ச்சியூட்ட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது
ரஜினியை இனியும் நம்ப வேண்டாம் என்பதில் அமித்ஷா உறுதியுடன் உள்ளாராம். அதேபோல் அதிமுகவுடன் இனி அரசியல்ரீதியான கூட்டும் வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். எனவே பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டுமானால், முள்ளை முள்ளால் எடுப்பது போல், திராவிடம் பேசி பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை திராவிட தலைவர்களை வைத்தே எதிர்க்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாம்
அதாவது அதிமுக, திமுகவில் தீவிரமாக திராவிடம் பேசும் இரண்டாம் கட்ட தலைவர்களை இழுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இழுக்க வேண்டிய தலைவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் சேர வெயிட்டான 'வைட்டமின் ப' கொடுப்பது, அல்லது வழக்கு போடுவோம் என மிரட்டுவது என இரண்டு அஸ்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.; எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் அதிமுக, திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் வட்டாரங்களில் கசிந்து வரும் இந்த வதந்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்