செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (21:36 IST)

நடிகர் சங்க தேர்தல் - தமிழக அரசு, ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ், ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற ஆளுமைகள் நிர்வாகிகளாக இருந்த பெருமைக்கு உரியது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த நடிகர் சங்கத்துக்கு வரும் 23ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
நடிகர் சங்க தலைவராக விஐயகாந்த், செயலாளராக சரத்குமார் ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் சங்கம் தவிர்க்க முடியாத அமைப்பாக மாறியது. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தலைவராக சரத்குமார், செயலாளராக ராதாரவி இருவரும் பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் மீது கடுமையான அதிருப்தியையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து விஷால் தரப்பு 2015ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை பெற்றது. பாண்டவர் அணி என பெயரிடப்பட்ட விஷால், நாசர், கார்த்தி அணியின் முக்கிய உறுதிமொழியாக நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை தனியாரிடம் இருந்து மீட்டு எடுத்து அதில் சொந்த கட்டடம் கட்டுவது என்பதாக இருந்தது. தேர்தலில் வென்ற பிறகு அதற்கான பணிகள் தொடங்கின.
 
விஷால் அணியின் இன்னொரு உறுதிமொழியான நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் கொடுப்பது தொடங்கப்பட்டது. நடிகர் சங்கதேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எங்களுக்கு விஷால் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி எஸ்.வி.சேகர் மற்றும் சமீபத்தில் மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் பாண்டவர் அணியில் இருந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக விஷால் தரப்புக்கு நெருக்கடி கொடுக்க நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு எதிராக எஸ்.வி.சேகர் சார்பில் 'சிஎம்டிஏ'வில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்க கட்டட பணியில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த தடைகள் சட்டரீதியாக நீக்கப்பட்டு, நடிகர் சங்க கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 50 சதவிதம் பணி முடியும் தருவாயில் தற்போதைய நிர்வாக குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
 
நாசர் தலைமையிலான நிர்வாகக் குழு நீதிமன்றத்தில் சட்டப்படி 6 மாத கால நீட்டிப்பு பெற்றது. நடிகர் சங்க கட்டடத்தின் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, மீதி கட்டட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுடன் நெருக்கமாக இருந்து வந்த செயற்குழு உறுப்பினர்களான நடிகர்கள் உதயா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களுடைய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தும் விஷால் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி விஷால் அணியில் இருந்து பிரிந்து வந்தனர். பிரிந்து வந்த இவர்கள் தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட போவதாக தொடர்ந்து கூறி வந்தனர். விஷாலுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்துவந்தனர்.
 
கல்வியாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தின் பாண்டவர் அணிக்கு உறுதுணையாக இருந்து வந்தார். நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது, நடிகர் சங்க கட்டட பணிக்கு நன்கொடை கொடுப்பது, நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி புரிவதன் மூலம் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி என நடிகர் சங்க பொறுப்பாளர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தார்.
 
இவரது தந்தை நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் விஷால் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐசரி கணேஷ் விஷால் மீது அதிருப்தியில் இருந்ததை விஷால் எதிர் அணி பயன்படுத்தி ஐசரி கணேஷ் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தயாரானது. இந்த அணி சார்பில் இயக்குனர் நடிகர் பாக்யராஜை தலைவராக போட்டியிடவைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின் அவரது சம்மதம் பெறப்பட்டு தலைவராக கே.பாக்யராஜும் பொது செயலாளராக ஐசரி கணேஷும் போட்டியிடுவது முறைப்படி அறிவிக்கப்பட்டது.
 
பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, குஷ்பு, கோவை சரளா, சரவணன், லதா, பிரேம் குமார், அஜய் ரத்னம், சிபிராஜ், ஹேமச்சந்திரன், சோனியா, மனோபாலா, வாசுதேவன், காளிமுத்து, ரத்னப்பா, ஜெரால்டு, ஜூனியர் பாலையா, ராஜேஷ், தளபதி தினேஷ், விக்னேஷ், பிரகாஷ் ஆகிய 23 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர். பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கே கணேஷ், துணை தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், கே ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அணியில் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அணிக்கு நடிகர்கள் அருண் பாண்டியன், பாபு கணேஷ், ஷாந்தனு, ஆரி, விஜய் கார்த்திக், வருண், விஜித் ஆகியோர் நேரில் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
 
2 அணிகள் மோதுவதால் நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. விஷால் அணியில் இருந்து பிரிந்தவர்களே ஒன்று சேர்ந்துள்ளதால் இந்த போட்டி அணி விஷால் அணிக்கு பெரிய சவாலாக இருக்கிறது. இரு அணிகளும் தங்களது சூறாவளி பிரசாரத்தை தொடங்கி இருக்கின்றன. நடிகர் சங்கத்தில் சினிமா நடிகர்கள் மட்டும் அல்லாது தமிழகம் முழுக்க நாடக நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 3000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள்.
 
இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசியலும் விளையாடுகிறது. கடந்த தேர்தலின்போது சரத் குமார் அதிமுகவில் இருந்தபோதும் ஜெயலலிதா சங்க தேர்தலில் தலையிடவில்லை. சினிமா சங்கமாக இருந்தாலும் நடிகர் சங்கத்துக்கு மாநில அரசின் ஆதரவும் அவசியம். இந்த தேர்தலில் மாநில அரசின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு அணிகளிலும் முக்கிய போட்டியாளர்களான விஷால், உதயா இருவருமே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முக.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது பரபரப்பானது. இரு அணிகளிலுமே எல்லா கட்சிகளை சேர்ந்த நடிகர்களுமே இருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இரண்டு அணிகளுமே நேரம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
விஷால் மனு தாக்கல் செய்ய வந்தபோது தி.மு.க.வில் இருந்து பூச்சி முருகன், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கோவை சரளா, காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு ஆகியோர் உங்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர். எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கிய அணி பாண்டவர் அணி என்று கூறலாமா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், "இங்கு யாரும் எந்த கட்சியின் பிரதிநிதியாக கட்சிக் கொடியோடு வரவில்லை. நடிகன், நடிகை என்ற உணர்வோடு வந்துள்ளனர். அதனால் அரசியல் சாயம் பூச வேண்டாம். கட்டடம் கட்டி திறப்பு விழா நடத்த வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்திக்கவுள்ளோம்" என்று கூறினார்.
 
தமிழக அரசு நேரடியாக தலையிடாவிட்டாலும் விஷாலுக்கு எதிரணி அமைந்ததில் ஆளுங்கட்சி பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்கே நகர் இடைதேர்தல் போட்டி, ஆளுங்கட்சி சேனல் மீது விமர்சனம், ஸ்டாலின் சந்திப்பு என பல சம்பவங்களில் விஷால் மீது ஆளுங்கட்சி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த நடிகர் சங்க தேர்தலில் ரஜினி, கமல் இருவரின் ஆதரவும் விஷால் அணிக்கு இருந்தது. இந்த தேர்தலில் கமல்ஹாசன் நாசரை முன்மொழிந்து இருக்கிறார். ஆனால் ரஜினி இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. பாக்யராஜ் பேட்டி அளித்தபோது இருவரின் ஆதரவும் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். ரஜினி மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருப்பதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சென்னை திரும்புவார். அப்போதுதான் அவரது ஆதரவு யாருக்கு என்பது தெரிய வரும்.
 
அடுத்த சில நாட்களுக்கு நடிகர் சங்க தேர்தல் தான் பரபரப்பான செய்தியாக இருக்கும். பலத்த போட்டி நிலவுவதால் 2 அணிகளும் போட்டி போட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து சங்க உறுப்பினர்களை சந்திப்பார்கள். பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். பணம் விளையாடும். எனவே பொதுதேர்தலுக்கு நிகரான பரபரப்பு சம்பவங்கள், பேட்டிகளை இனி பார்க்கலாம். தேர்தல் முடிவுகள் 24ந்தேதி தெரிய வரும்.