நாடு முழுவதும் 20 லட்சம் செல்போன் எண்களை முடக்க அதிரடி உத்தரவு! – என்ன காரணம்?
சைபர் க்ரைம் மோசடி வழக்கு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் செல்போன் எண்களை முடக்க தொலைத்தொடர்பு துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்தும் நிலையில் பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் சிம் கார்டுகளையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மோசடி பேர்வழிகள் பலர் இதுபோன்ற சிம் கார்டுகளை வாங்கி அதன்மூலம் ஆன்லைன் மோசடி உள்ளிட்ட சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதும் அதிகமாக உள்ளது. மேலும் தேச விரோத காரியங்களுக்கும் இதுபோல செல்போன் எண்களை விஷமிகள் பயன்படுத்தும் சம்பவங்களும் நடக்கிறது.
இதனால் இதுபோன்ற குற்ற புகார்களுக்கு உள்ளான செல்போன் எண்களை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம், மாநில போலீஸார் நடத்திய கூட்டு ஆய்வு நடவடிக்கையில் 28,200 செல்போன் எண்கள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்களை உடனடியாக முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் 20 லட்சம் செல்போன் இணைப்புகளை மறு ஆய்வு செய்து அதில் மோசடி சம்பவங்களில் பயன்படுத்தப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K