இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
இந்தியாவில் 80 சதவீத கணித ஆசிரியர்கள் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1300க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80 சதவீதம் பேருக்கு இயற்கணிதம் உள்ள பாடங்களில் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்தனர் என்றும் ஆனால் 7ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடையளித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கு 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறான புரிதலோடு பதில் அளித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளை செய்தனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.