வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (11:36 IST)

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

Tamilnadu assembly
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் மது விலக்குச் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, சட்டப்பேரவையில் விஷச்சாராய வழக்கு தொடர்பாக நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை என்றார். 
 
இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று சனிக்கிழமை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
 
அதன்படி சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் மது விலக்குச் சட்ட திருத்த மசோதா செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவல்துறை எச்சரிக்கை:
 
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை என்றார். மேலும் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

 
தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் மரணம் ஏற்பட்டால் மாவட்ட காவல் அதிகாரிகளே அதற்கு பொறுப்பு என்று  ஸ்டாலின் எச்சரித்தார். போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.