புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2014 (14:32 IST)

தேர்தல் துவங்கிய பின் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீடு

பாஜக -வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வாசிக்கப்பட்டது.
 
அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள ஆறு தொகுதிகளில் ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  
 
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
பாஜக ஆட்சிக்கு வந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். நாட்டில் புதிய வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறு பான்மை மக்கள் கல்வி, தொழிலில் முன்னுரிமை பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்பை பெறும் வகையில் தொழில் துறையில் பயிற்சிகள் வழங்கப்படும்.
 
உள்ளூர் சிறுவர்த்தகத்தை பாதிக்காத வகையில் அன்னிய நேரடி முதலீடு வரவேற்கப்படும்.அனைத்து கிராமங்களுக்கும் குடி தண்ணீர் வழங்குப்படும். புதிய தேசிய சுகாதார திட்டம் அறிமுகம் செய்யப் படும். இதன் மூலம் நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப் படும். டெல்லியில் இருப்பது போன்று அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்படும்.
 
நாடெங்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வரப்படும்.ஊழலை முற்றிலுமாக ஒழிக்க திட்டங்களில் சீரமைப்பு செய்யப்படும்.வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
 
பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் பாதுகாப்புக்கு என தனி சிறப்புப் படைகள் உருவாக்கப்படும்.
 
வரி கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரிமுறை இருக்கும்.வரி கட்டமைப்பால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறைக்கப்படும். 
 
மத்திய-மாநில அரசுகளின் உறவு சுமூகமாக இருக்கும் வகையில் புதிய கொள்கைகள், செயல்பாடுகள் கடைபிடிக்கப்படும். நாட்டின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு மாநில அரசுகளின் பங்கேற்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.