கர்நாடக சங்கீதம் என்றாலே மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியது என்ற பார்முலாவை உடைத்து, இசை ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஆளாக ஆகலாம் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கும் படம் தான் 'சர்வம் தாளமயம்
மிருதங்கம் செய்து வித்வான்களுக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் குடும்பத்தை நடத்தும் குமாரவேலின் மகன் தான் ஜிவி பிரகாஷ். விஜய் ரசிகர், ஒன்றுக்கும் உதவாத ஊதாரி என சுற்றி திரியும் ஜிவி பிரகாஷூக்கு மிருதங்க வித்வான் நெடுமூடி வேணுவின் மிருதங்கத்தை அருகில் இருந்து ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. இதனையடுத்து முறைப்படி மிருதங்கம் கற்க நெடுமுடியின் சிஷ்யனாக விரும்புகிறார். ஆனால் நெடுமுடியின் உதவியாளர் வினீத், ஜிபி பிரகாஷை அடித்து துரத்திவிட, பின் நீண்ட போராட்டத்திற்கு பின் நெடுமுடிவிடம் சிஷ்யனாக சேருகிறார். இதன்பின் ஜிவி பிரகாஷின் இசைத்தேடல், சந்திக்கும் பிரச்சனைகள், குரு-சிஷ்யன் உறவில் ஏற்படும் பிணக்கம், இறுதியில் ஏற்படும் சுபமுடிவு ஆகியவைதான் இந்த படத்தின் மீதிக்கதை
ஒரு இசைக்கலைஞன் ஹீரோ என்பதால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை இயக்குனர் ராஜீவ் மேனன் தேர்வு செய்தது சரியே என்ற அளவில் இருந்தது அவரது நடிப்பு. ஆரம்பத்தில் விஜய் ரசிகன் பீட்டராகவும், பின் இசைக்கலைஞன் பீட்டராகவும் என இரண்டு பரிணாமங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அபர்ணாவை காதலிப்பதாக முதலில் கூறி பின் மொக்கை வாங்குவதும் அதன்பின் காதல் கைகூடியவுடன் நெருக்கமாவதும் என ரொமான்ஸ் காட்சிகளிலும் ஜிவிபி தேறி விடுகிறார்.
நாயகி அபர்ணாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் கவிதை. குறிப்பாக ஜிவி பிரகாஷுக்கு ஒவ்வொரு முறையும் அவர் சொல்லும் அறிவுரை ஒவ்வொரு இளைஞனுக்கும் பொருந்தும்
நெடுமுடிவேணு, மிருதங்க வித்வான் கேரக்டராகவே மாறிவிட்டார். இதைவிட சிறப்பாக வேறு யாரும் நடிக்க முடியுமா? என்பது சந்தேகமே. மிருதங்கம் வாசிக்கும்போது அவருடைய உடல்மொழி அபாரமானது. ஒரு இசைக்கலைஞனிடம் உள்ள திமிர், அகங்காரம், விட்டுக்கொடுக்காமல் பேசுவது, அதே நேரம் திறமையை பாராட்டுவது, என பல்வேறு பரிணாமங்கள் இவரது நடிப்பில் தெரிகிறது.
குமாரவேல் வழக்கமான நடிப்பையும் வினீத், டிடி ஆகியோர் கொஞ்சம வில்லத்தன நடிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ரவி யாதவ் ஒளிப்பதிவில் வட இந்திய காட்சிகள் அருமை. படத்தொகுப்பாளர் படத்தை ஓரளவு விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தின் முதுகெலும்பு என்று கூறினால் மிகையாகாது. பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் ஒலித்து கொண்டே உள்ளது. 'சர்வம் தாளமயம், 'எப்ப வருமோ எங்க காலம், 'மாயா மாயா', 'வரலாமா உன்னருகில் பெறலாமா உன் அருளை' ஆகிய பாடல்கள் மிக அருமை. அதேபோல் ஒவ்வொரு காட்சியையும் பின்னணி இசை தூக்கி நிறுத்துகிறது.
இசை ஆர்வமுள்ள ஒரு அடிமட்ட இளைஞன் மேலே வர என்னென்ன தடைகள், எத்தனை இடைஞ்சல்கள் என்பதை படிப்படியாக ஒவ்வொரு காட்சியின் மூலம் இயக்குனர் ராஜீவ்மேனன் விளக்கியுள்ளது அருமை. அதேபோல் இசைப்போட்டி என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் நடக்கும் கூத்து, ஜட்ஜ் என்ற பெயரில் செய்யும் போலித்தனமான செயல்கள் ஆகியவைகளை கிண்டலடிக்கும் காட்சிகள் அருமை. மேலும் இசையை சொல்லிக்கொடுக்க ஒரு குரு தேவையில்லை, இயற்கை மற்றும் அது கொடுக்கும் சப்தங்கள் தான் உண்மையான குரு என்பது உள்பட பல ஆழமான விஷயங்களை எளிதில் பாமரனும் புரிந்து கொள்ளும்படி காட்சிகளில் விளக்கியுள்ளது அருமை
மொத்தத்தில் ஒரு அழகிய இசைப்பயணம் தான் இந்த 'சர்வம் தாளமயம்'
3.5/5