வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (14:48 IST)

நயன்தாராவின் "ஐரா" திரைவிமர்சனம்!

நடிப்பு - நயன்தாரா, கலையரசன், யோகிபாபு மற்றும் பலர்
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கேஎம் சர்ஜுன்
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
வெளியான தேதி - 28 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 3/5

 
கதைக்கரு:- 
 
சமூகத்தால் இழிவுப்படுத்தப்படும் ஒரு பெண், ஆவியாய் வந்து பழிவாங்கும் படம் தான் ஐரா.
 
கதைக்களம் :- 
 
ஒரு பெரிய பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரியும் யமுனாவுக்கு (வெள்ளை நயன்தாரா) யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதற்கு அவரது உயரதிகாரிகளும், பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என நினைக்கும் பெற்றோரும் தடையாக இருக்கிறார்கள். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார். 
 
கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு இல்லாத பேயை இருப்பது போல் சித்தரித்து, பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து சில பல வீடியோக்களை எடுத்து யூடியூபில் அப்லோடு செய்கிறார்கள். 
 
அப்போது தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார். 
 
மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. சென்னையில் கலையரசனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் விபத்தில் இறக்கிறார். இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் உள்பட சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார். 
 
இதற்கிடையே, பொள்ளாச்சியிலும் யமுனாவை நிஜப் பேய் ஒன்று துரத்துகிறது. யமுனாவை கொல்லத் துடிக்கும் அந்த பேய் பவானி (கருப்பு நயன்தாரா) என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் யமுனாவை கொல்லத்துடிக்கிறார்? மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 
 
 
படத்தின் ப்ளஸ்:- 
 
இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா, அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். யமுனா, பவானி என இரு முரண்பாடான கதாபாத்திரங்களை தனது தோளில் சுமந்திருக்கிறார் நயன்தாரா. அவரது வழக்கமான படங்களில் இருந்து வேறுபட்டு, கருப்பு மை பூசி, உடல்மொழியை மாற்றி கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். 
 
பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். 
 
படத்தின் மைனஸ்:- 
 
ஐரா நாம் ஏற்கனவே பார்த்து சலித்து போன அதே பேய் பட டெம்ப்லேட்டுக்குள் படம் அடங்கி விடுகிறது. பேய் எல்லாம் பாவம் பாஸ், விட்டுருங்க என கெஞ்சும் அளவுக்கு தான் இருக்கிறது கேப்கப். பார்வையாளர்களை எந்த இடத்திலும் பயமுறுத்தாத, வியப்படைய செய்யாத காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தை பலவீனப்படுத்துகிறது.
 
லிப்டில் தாமதமாக போனதற்காக யமுனாவை ( வெள்ளை) பவானியை( கருப்பு ) கொல்லத் துடிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. 'இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க' என்று தான் யோசிக்க வைக்கிறது.
 
இரண்டாம் பாதியை போல், முதல் பாதியை  சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மிக எளிதாக நம்மால் யூகித்துவிட முடிகிறது. ப்ளாஷ் பேக்கை பார்த்து பவானி மீது ஏற்படும் அனுதாபம், தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது போய் விடுகிறது. 
நிறைய புதிய விஷயங்களை யோசிக்கும் சர்ஜுன் க்ளைமாக்ஸையும் புதிதாக யோசித்திருக்கலாம். படத்தின் கேரக்டரில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் 'ஐரா'வை நாமும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம். 
 
இறுதி அலசல்:-
 
மொத்தத்தில், குறைகள் சில இருந்தாலும் அதை ஒதுக்கிவைத்துவிட்டு ஐராவை நயன்தாராவிற்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.