ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (18:14 IST)

மக்கள் நீதி மய்யம்: திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்காதது ஏன்? - விளக்கும் நிர்வாகி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வலதுசாரிகளுக்கு ஆதரவாகவோ, இடதுசாரிகளுக்கு ஆதரவாகவோ இல்லாமல் மையத்தில் நின்று இந்த சட்டம் குறித்து முடிவுசெய்யவேண்டும் என்பதால், இந்த சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளவில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், தானும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், திமுக எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்த அனைத்து கட்சியினருக்கும் அழைப்புவிடுத்தது.
 
இதில் கமலின் மக்கள் நீதி மய்யமும் அடக்கம். இந்த பேரணியில் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பெயர் குறிப்பிட விரும்பாத மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கட்சியின் முடிவு வலதுசாரிக்கு ஆதரவானதாகவோ, இடதுசாரிக்கு ஆதரவானதாகவோ இல்லை என்பதால் பேரணியில் பங்கேற்கவில்லை என பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
 
''கட்சியின் தலைவரான கமல் ஹாசன் தனது சொந்த காரணத்திற்காக வெளிநாடு செல்கிறார். துணைத்தலைவரான மகேந்திரன் கூட வெளிநாட்டில் இருப்பதால், நாங்கள் திமுகவின் இந்த பேரணியில் கலந்துகொள்ளவில்லை. அதனைவிட முக்கியமாக இந்த விவகாரத்தில் நாங்கள் மய்யமாக ஒரு முடிவை எடுக்கவிரும்புகிறோம். இதனால் வெளிப்படையாக இதுகுறித்து அறிக்கை வெளியிடவில்லை,'' என்றார் அந்த உறுப்பினர்.
 
கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லையா என்றும் கமல் அல்லாத பிறர் கட்சியை முன்னிறுத்தமாட்டார்களா எனக்கேட்டபோது, ''குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள்தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தற்போது யார் பக்கமும் சார்ந்து நாங்கள் முடிவெடுக்க விரும்பவில்லை என்பதால் ஆலோசனை செய்துவருகிறோம்,''என்றார்.
 
ஆனால் மக்கள் நீதி மையத்தில் ஊடக செயலாளர் முரளி அப்பாஸ் மற்ற உறுப்பினர்கள் சொல்வதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்.
 
''இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் எந்த மாற்றம் இல்லை. தொடர்ந்து கமல் ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக எதிர்ப்பு செய்தியை வெளியிடுகிறார். திமுகவின் அழைப்புக்கு நன்றிசொல்லியிருக்கிறோம். கட்சியின் அதிகாரபூர்வ ஊடகசெயலாளராக இருக்கும் நான் சொல்வதை எடுத்துக்கொள்ளுங்கள்,'' என்றார்.
 
பேரணியில் பங்கேற்காதது குறித்து ஊடகத்திற்கு அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டபோது, ''பேரணியில் பங்கேற்கவில்லை என்பதை நாங்கள் முக்கிய அறிவிப்பாகக் கருதவில்லை. நாங்கள் வழக்குப் போட்டிருக்கிறோம், நேரடி பங்களிப்பை செலுத்துகிறோம். இதனைவிட ஆதாரம் தேவையா?. நாங்கள் திமுகவின் பேரணிக்கு ஆதரவு என்பதால்தான் கமல் ட்விட்டரில் ஒரே குரலில் ஒலிப்போம் எனப் பதிவிட்டுள்ளார்,'' என்றார் முரளி அப்பாஸ்.