1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (13:50 IST)

கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது...?

Krishna Jayanti
கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் அவதரித்தவர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி வரும் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


இந்நாளை கிருஷ்ண ஜெயந்தி என்றும், ஜென்மாஷ்டமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கண்ணா, முகுந்தா என்று பல பெயர்களில் கிருஷ்ணரை அழைக்கிறோம். பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். வாசலில் தொடங்கி பூஜையறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்க வேண்டும். இது கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் வருவதாக ஐதீகம்.

பூஜையறையில் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, அதிரசம் என பலவகை பலகாரங்களை படையலிட்டு பூஜை செய்ய வேண்டும். மேலும் இந்நாளில் வீட்டில் உள்ள குழந்தைகளும், பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளும் கிருஷ்ணர், ராதை போல் வேடம் அணிவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்தவொரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதத்தை மேற்கொள்வார்கள். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பார்கள். இவ்விரதத்தின்போது பகவத் கீதை, கிருஷ்ணர் குறித்த பஜனைகள், பாடல்கள், கீர்த்தனைகள் இசைத்து விரதத்தை முழுவதும் கிருஷ்ணரின் மீது லயிக்க விடுவார்கள்.

பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விரதம் இருக்க விரும்பினால், காலையிலிருந்து எந்த ஒரு திட ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நீர், பழங்கள், பழச்சாறு, பால் போன்ற திரவ ஆகாரத்தை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். உப்பு சேர்த்த உணவுகள், நீர் ஆகாரங்கள், தானியங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக இந்த விரதத்தின்போது எடுத்துக்கொள்ளக்கூடாது.