கோகுலாஷ்டமி நாளின் சிறப்புக்களும் பலன்களும் !!
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணன் அவதரித்தார்.
முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள். இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார்.
அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மங்களகரமான காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கோகுலாஷ்டமி அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, வாசல் முழுக்க கோலமிட்டு , வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
பூஜையின் போது ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம் சொல்லி வழிபடுவது மிகவும் சிறந்தது. கோகுலாஷ்டமி ஒருநாள் முழுவதும், அந்தப் பாலகிருஷ்ணனையே நினைத்து, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று அவனது திருநாமத்தையே நினைவில் கொண்டு அனுஷ்டிக்கும் விரதம் பல்லாயிரம் ஏகாதசி விரதங்கள் அனுஷ்டிப்பதற்குச் சமமாகும்.