வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (12:26 IST)

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

Sadhguru

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 15.23-லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டு உள்ளது. 

 

 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நர்சரிகள் மூலம் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் விடுமுறை நாட்கள் தவிர்த்து நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வீதம் மொத்தமாக 15,23,255 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் நடவு பணிக்காக வழங்கப்பட்டு உள்ளன. ஈஷா நர்சரிகள் துவங்கப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக 15-லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஒரே மாதத்தில் வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 

 

காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் இது குறித்து கூறுகையில், “காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 82 நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 39 உற்பத்தி நர்சரிகளாகவும், 43 விநியோக நர்சரிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த நர்சரிகளின் ஆண்டு மொத்த உற்பத்தி 1.48 கோடி மரக்கன்றுகளாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 40 நர்சரிகள் செயல்பாட்டில் இருக்கின்றன, இதில் கடலூர், திருவண்ணாமலை, கோவை ஆகிய இடங்களில் பெரிய அளவிலான உற்பத்தி நர்சரிகள் இயங்கி வருகின்றன. 

 

இந்த நர்சரிகளில் 400-க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மரக்கன்று உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். இவர்கள் விதை சேகரிப்பு, தாய் படுகை அமைப்பது, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தேங்காய் நார் கழிவுகள் மற்றும் இயற்கை உரம் நிரப்பட்ட பைகளில் கன்றுகளை இடம் மாற்றுவது, தினசரி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். 

 

அதே போன்று காவேரி கூக்குரல் இயக்கத்தில் 150-க்கும் மேற்பட்ட முழு நேரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாநிலம், மண்டலம், மாவட்டம் மற்றும் தாலுக்கா அளவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு தோராயமாக 300 விவசாயிகளை அவர்களின் நிலத்திற்கு நேரில் சென்று சந்திக்கின்றனர். அங்கு மண்ணின் தன்மை, தரம் மற்றும் நீரின் மூலக்கூறுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு அவர்களின் மண்ணுக்கு ஏற்ற மரங்களை பரிந்துரை செய்கின்றனர். மேலும் மரக்கன்றுகள் நடவு செய்ய தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 60,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகள் நடுவதற்கு ஆலோசனை வழங்கிய ஈஷா வேளாண்காடுகள் பணியாளர்கள், நாற்றுப்பண்ணை உற்பத்தி மற்றும் விநியோக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தாண்டு மட்டும் இதுவரை 85 லட்ச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகளில் 80% விவசாய நிலங்களில் நடப்படுவதற்காக விவசாயிகளுக்கும், 20% பொது மக்களின் பயன்பாட்டிற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

 

விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வியக்கம், பல்வேறு தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களோடு இணைந்து பல பயிற்சி கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. இதன் மூலம் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். மேலும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் 150 வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கும் 30,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன” என அவர் தெரிவித்தார். 

 

காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, காவேரியின் கிளை நதிகளையும், காவேரியையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.