புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (07:47 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்! சாம்பியன் யார்?

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளின் அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறவுள்ளன. 
 
இந்த போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
 
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும் லீக் சுற்றுக்களின் போட்டி முதலில் நடைபெறும், அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 9 லீக் சுற்றுப்போட்டிகளில் விளையாடும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதிபெறும்.
 
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டது.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. பயிற்சி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது போல் லீக் போட்டிகளிலும் இந்திய அணி தனது திறமையை வெளிப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 
இதுவரை உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா ஐந்து முறையும், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறையும், இந்தியா இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. 12வது உலகக்கோப்பையின் சாம்பியன் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்