ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (20:42 IST)

நீ அடிச்சா தூசு.. நான் அடிச்சா மாஸு - சரமாரி ரன் மழை பொழிந்த இங்கிலாந்து

நடைபெற்று கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து சரமாரியாக அடித்து 397 ரன்கள் எடுத்து இமாலய சாதனை படைத்துள்ளது. அடுத்து ஆடும் ஆப்கானிஸ்தான் இமாலய இலக்கை உடைக்க முடியாமல் ஆட்டம் கண்டு நிற்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜானி பேர்ஸ்டோ வழக்கம்போல அற்புதமாக விளையாடி 90 ரன்களை எடுத்திருந்தார். சதமடிக்க இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஜோ ரூட் மற்றும் இயோன் மோர்கன் இருவரும் பந்தை அடித்து விளாசினார்கள். இயோன் மோர்கன் மட்டும் மொத்தமாக 17 சிக்ஸர்கள் அடித்தார். மொத்த அரங்கமுமே பிரமிக்கும் வகையில் அவர் ஆட்டம் இன்று இருந்தது. வெறும் 71 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் மோர்கன். மோர்கன்தான் இன்றைய ஆட்ட நாயகன் என இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து கடைசி ஓவர்களில் சோர்வடைய ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நாயிபின் வேகப்பந்து வீச்சு 3 விக்கெட்டுகளை அசால்ட்டாக காவு வாங்கியது. இருந்தாலும் 50 ஓவர்கள் வரை நின்று ஆடிய இங்கிலாந்து 397 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது.

398 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொள்ள களம் இறங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களுக்கே 80 ரன்களைதான் நெருங்கியிருக்கிறது. சின்ன சின்ன டார்கெட்டுகளையே வெற்றி பெற முடியாமல் தொடர்ந்து தோல்வியுற்று வந்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இந்த இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு இயலாத காரியமென்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தன்னை பலப்படுத்திக்கொள்ள கூடுதல் அவகாசம் தேவை.