வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (17:10 IST)

295 ரன்கள் குவித்து வெ.இ. நிதான ஆட்டம் – ரோஸ்டன் ச்சேஸ் 98 ரன்கள் நாட் அவுட்

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஹைதராபாத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் குவித்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 113 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது ரோஸ்டன் ச்சேஸ் மற்றும் ஷென் டோரிக் ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று 59 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 182 ஆக இருந்த போது டோவ்ரிக் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹோல்டர் மற்றும் ச்சேஸ் இணை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. இதனிடையில் அரைசதம் கடந்த ஹோல்டர் 52 ரன்களில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கீப்பர் ரிஷப் பாண்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ச்சேஸ் 98 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் விளையாடி வருகிறார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்துள்ளது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களும் அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.