கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!
இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடரும் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரும் அமைந்துள்ளன. வரிசையான டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த அவருக்கு இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும். அதன் பின்னர் நடந்து வரும் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் இறங்கும் கே எல் ராகுல் ஆறாவது இடத்தில் பேட் செய்ய வைக்கப்படுகிறார். அவருக்குப் பதில் அக்ஸர் படேல் ஐந்தாவது இடத்தில் இறக்கப்படுகிறார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இது நிலையான வியூகம் இல்லை என ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர் “கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை. அவர் ஐந்தாவது இடத்தில் மிகச்சிறப்பாக பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அக்ஸர் படேல் நன்றாக விளையாடினாலும், இது நல்ல வியூகம் இல்லை. முக்கியமானப் போட்டிகளில் கைகொடுக்காது. கம்பீரின் இந்த வியூக,ம் சரியில்லை” எனக் கூறியுள்ளார்.