1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (08:11 IST)

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக செயல்ப்பட்டு 234 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை அடித்து விளாசி அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ருத்துராஜ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்த போட்டியில் ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் இறுதிகட்ட ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய இந்திய வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடைசி ஐந்து ஓவர்களில் சூர்யகுமார் யாதவ்வின் ஸ்ட்ரைக் 225 ஆக இருக்க, ரிங்குவின் ஸ்ட்ரைக் 221.5 ஆக உள்ளது. அதற்கடுத்த இடங்களில் ரோஹித் ஷர்மா (201), விராட் கோலி (192),  யுவ்ராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர். அணிக்குள் வந்த மிகக் குறுகிய காலத்திலேயே ரிங்கு சிங் இந்த சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.