50 ஓவர் கிரிக்கெட் செத்துவிட்டது… இங்கிலாந்து வீரர் மொயின் அலி தடாலடி கருத்து!
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
இந்த தொடரில் இந்தியா விளையாடிய மற்ற போட்டிகள் தவிர்த்து எந்த போட்டிகளுக்குமே பெரிதாகக் கூட்டம் சேரவில்லை. இதனால் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அவர் “உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற ஐசிசி தொடர்கள் தவிர்த்து ஒரு நாள் கிரிக்கெட் செத்துவிட்டது. இருப்பதிலேயே மோசமான ஃபார்மட் ஒருநாள் கிரிக்கெட்தான் என்றாகி விட்டது. உள்நாட்டு டி 20 லீக் தொடர்களில் கிடைக்கும் அதிகப் பணத்தால் வீரர்கள் அதை நோக்கி செல்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் பல வீரர்கள் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்காக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்கள்” எனக் கூறியுள்ளார்.