கம்பேக் போட்டியிலேயே ஆட்டநாயகன் –உற்சாகத்தில் ஜடேஜா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களும் 70 ரன்களும் சேர்த்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
காயம் காரணமாக ஐந்து மாதங்களாக சர்வதேசப் போட்டியில் விளையாடாமல் இருந்த ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பி முதல் போட்டியிலேயே கலக்கியுள்ளார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும்போது “அற்புதமான உணர்வு. ஐந்து மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து, 100 சதவீதத்தை அளிக்கும் போது, ரன் குவிப்பதும், விக்கெட்டுகளை எடுப்பதும்.. ஆச்சரியமாக இருக்கிறது. என்.சி.ஏ-வில் கடுமையாக உழைத்தேன். NCA ஊழியர்கள், பிசியோதெரபிஸ்ட்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட என்னுடன் கடினமாக உழைத்தார்கள்.
சரியான பகுதிகளில் பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பந்து சுழன்று கொண்டிருந்தது, நேராக சென்றது. ஸ்டம்பில் பந்து வீச விரும்பினேன்- அவர்கள் தவறு செய்தால், எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நான் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க பார்க்கிறேன். எனது பேட்டிங்கில் விஷயங்களை மாற்றாமல் இருக்க முயற்சி செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.