திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (14:45 IST)

அவதார்-2 ரிலீஸின்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்த என்ன காரணம்?

Avatar 2
தமிழ்நாட்டில் திரையிடப்படும் ஆங்கிலப் படங்களுக்கும் பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கு 55 சதவீதத்திற்கு மேல் கொடுக்கப் போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். என்ன காரணம்?

தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கம் டிசம்பர் 22ஆம் தேதியன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தின்படி, வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் திரைப்படங்களுக்கும் விநியோகிஸ்தர் பங்குத் தொகையாக 55 சதவீதத்திற்கு மேல் கொடுப்பதில்லையென கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திரையரங்குகளைப் பொறுத்தவரை, திரையிடப்படும் படங்களில் இருந்து அந்தப் படத்தின் விநியோகிஸ்தர்களுக்கு செல்லும் தொகை வெவ்வேறு விகிதங்களில் இருக்கும். நேரடி தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஆங்கிலம், பிற மொழி திரைப்படங்கள், பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் திரைப்படங்களுக்கும் இந்த பங்கு விகிதம் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

நேரடி தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, திரையரங்க உரிமையாளர்களின் பங்கு முதல் வாரத்தில் 25 சதவீதத்தில் துவங்கி அதிகரித்துக்கொண்டே செல்லும். ஆங்கிலம் மற்றும் மொழிமாற்றத் திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஐம்பது சதவீதத்தில் துவங்கி அதிகரிக்கும்.

ஆனால், சமீபத்தில் வெளியான மிகப் பிரமாண்டமான அவதார் 2 படத்தில்தான் பிரச்னை துவங்கியது. அந்தப் படத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் திரையிட விரும்பும் திரையரங்குகள் 30 சதவீத பங்கை எடுத்துக் கொண்டு, 70 சதவீத பங்கை விநியோகிஸ்தர்களுக்குக் கொடுக்க வேண்டுமென கூறப்பட்டது.

சென்னையில் உள்ள பல திரையரங்குகள் இதனை ஏற்கவில்லை. இதன் காரணமாக, சில திரையரங்குகளில் அந்தப் படம் முதல் நாளில் வெளியாகவில்லை. இதனை சில திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்.

பின்னர், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அடுத்த நாள்தான் இந்தத் திரையரங்குகளில் அந்தப் படம் வெளியானது.

"அந்த ஆங்கிலப் படத்திற்கு 70 சதவீதத்தை பங்குத் தொகையாகக் கேட்டார்கள். இதன் காரணமாக சிலர் இந்தப் படத்தையே திரையிடவில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரான ஸ்ரீதர்.

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்காவது ஒரே மாதிரியிருக்கும். ஆனால், பல ஆங்கிலத் திரைப்படங்கள், மொழிமாற்றத் திரைப்படங்களுக்கு அடுத்த நாள்கூட பார்வையாளர் எண்ணிக்கை 10க்கும் கீழே குறைந்து விடுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மொத்தத் தொகையே திரையரங்கின் அந்தக் காட்சிக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த போதாது. அந்த நிலையில், அந்தப் பத்துப் பேரின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேல் பங்குத் தொகையாகச் செலுத்துவது எப்படி என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

மேலும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 55 சதவீத பங்கிற்கு ஒப்புக்கொண்ட விநியோகிஸ்தர்கள், தமிழ்நாட்டில் மட்டும் கூடுதலாகக் கேட்ட நிலையிலேயே, திரையரங்க உரிமையாளர்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.