செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (13:10 IST)

காதலர் தினத்தில் திருமணம் செய்யவுள்ள திருநர்-திருநங்கை இணை: கேரளாவை சேர்ந்தவர்கள்

(இன்று 10.02.2022 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

கேரளாவில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்த சியாமா - மனு ஆகிய இருவரும், காதலர் தினத்தன்று திருநர் - திருநங்கை அடையாளங்களுடன் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இருவரும் திருநர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய மாநில உயர் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளனர்.

பிப்ரவரி 14 காலை 9.30 மணியளவில் மனு, சியாமா இருவரது திருமணமும் நடைபெறவுள்ளதாகவும், திருமணத்திற்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எல்ஜிபிடிக்யூ+ சமுகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநர், திருநங்கை அடையாளத்தின் கீழ் திருமணம் செய்யவுள்ள மனு, சியாமாவின் முடிவுக்கு, கேரளாவில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

கர்நாடகாவைத் தொடர்ந்து, தெலங்கானாவிலும் ஹிஜாப் சர்ச்சை

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மறுவாழ்வு அறிவியல் கல்வி நிறுவன நிர்வாகம், முஸ்லிம் மாணவிகளை பர்தா அணிவதைத் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, புதன்கிழமையன்று இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் ஒருவர், தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தொடர் ட்வீட்கள் மூலம் இதை தெரிவித்துள்ளார்.

தன்னை ஃபாத்திமா என்று அழைத்துக் கொண்டு, @hyderabadihaii என்ற கணக்கில் இருந்து ட்வீட் செய்த அவர், முஸ்லீம் பெண்களை பர்தா அணிந்து வரக் கூடாது என்று அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஹைதராபாத்தில் நடப்பது ஆச்சரியமாக உள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும் #தெலங்கானா," என்று அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து, திருச்சி காவல்துறையும், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரும் புலன் விசாரணை மேற்கொண்டும், அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சி.பி.ஐ. காவல்துறை மேற்கொண்ட விசாரணையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இந்த கொலை வழக்கை தமிழ்நாடு காவல்துறையிடமே மீண்டும் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வருகிற 21ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்றும், விசாரணை விவரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.