திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (13:45 IST)

'அதீத பணம், குறைவான வேலை நேரம்'- ஆனால்.. நார்வே மக்கள் குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிக்கிறார்களா?

நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார்.


 

ஆஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஸ்காண்டிநேவியான் இலக்கிய பேராசிரியரான இவர், பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்டப்படுபவர்களுடன் ஒப்பிட்டு வருந்துகின்றனர் என்கிறார்.
 

"மற்றவர்கள் துன்பமான சூழலில் வாழும் அதே உலகில் வசதியான வாழ்க்கையை அனுபவிப்பது பற்றிய குற்றவுணர்வு வெளிப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்," என்று அவர் விளக்கினார்.
 

நார்வே உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். அதன் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளம்தான் இதற்கு முக்கிய காரணம். ரஷ்யாவுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பை கொண்டிருக்கும் நாடு இது.

 

நார்வே மக்கள் தொகையில் ஒரு தனிநபர் அடிப்படையில் அதன் பொருளாதார வலிமை அளவிட்டால், இது பிரிட்டனை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். மேலும் அமெரிக்காவை ஒப்பிடும்போதும் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது.
 

நார்வே அரசு, உபரி தொகையுடன் அதன் பட்ஜெட்டை திட்டமிடுகிறது. காரணம், அதன் தேசிய வருமானம் அதன் செலவினத்தை விட அதிகமாக உள்ளது.
 

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ள பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நார்வே வேறுபட்டு நிற்கிறது.

 

கலைப் படைப்புகளில் பிரதிபலிக்கும் குற்றவுணர்ச்சி

 

ஸ்காண்டிநேவியான் புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தங்கள் காலத்தின் பரந்த கலாசாரத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட்.
 

''இந்த ஊடகங்கள் நார்வேயின் பணக்கார வாழ்க்கையால் ஏற்படும் குற்றவுணர்ச்சியை பற்றி பேசுவதை நான் அதிகளவு பார்க்கிறேன்’’ என்கிறார் அவர்.
 

''நவீன இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்ததன் மூலம், துன்பப்படும் மக்களுக்கு மத்தியில், அதிர்ஷ்டசாலிகளாக, மகிழ்ச்சியான அல்லது வசதியான வாழ்வை கொண்டிருப்பது மக்கள் மத்தியில் கவலை, அசௌகரியம், குற்ற உணர்வு அல்லது அவமானம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் உணர முடிந்தது” என்று விவரித்தார்.
 

"நார்வேயில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த குற்றவுணர்ச்சி இல்லை என்றாலும், பலருக்கு இந்த உணர்வு இருக்கிறது." என்று பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார்.
 

சமீபத்திய நார்வே நாடகங்களில் இடம்பெற்றுள்ள கதைக்களங்களில், சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள் பிரிவினர், தங்கள் குடியிருப்புகளின் அடித்தளத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழங்கும் சேவைகளை நம்பியுள்ளதாக காட்டப்படுகிறது.

மேலும், ஏழை நாடுகளில் இருந்து வந்து குறைந்த ஊதியத்துக்கு தங்களது குழந்தைகளை பார்த்து கொள்ளும் பணியாளர்களை சார்ந்திருப்பதன் மூலம் , தங்கள் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக நார்வே பெண்கள் உணர்வது போன்ற கதைக்களமும் நாடகங்களில் இடம்பெற்றுள்ளது என்கிறார் பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட்.
 

கலையை பிரதிபளிக்கும் வழக்கம் நிஜ வாழ்க்கைக்கு உள்ளது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள மற்றும் வீட்டு வேலைகளை செய்ய வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வேலை உரிமம் வழங்குவதை நிறுத்தியதாக நார்வே அரசாங்கம் மார்ச் மாதம் அறிவித்தது. விஜே என்ற பத்திரிக்கை, இந்த நடைமுறையை "மேற்குலக அடிமைத்தனம்" என்று அழைக்கிறது
 

நார்வேயின் செல்வம் தார்மீக நடத்தையின் விளைவாக உருவானதா என்ற சந்தேகத்தை எழுப்பும் ஏராளமான தனிநபர்கள் மற்றும் குழுக்களும் நார்வே மக்களின் குற்ற உணர்வுகள் தூண்ட வழி வகுத்துள்ளனர்.
 

இந்த ஆண்டு ஜனவரியில், தி பைனான்சியல் டைம்ஸ் ஒரு சிறப்பு செய்தியை வெளியிட்டது. இது ஆப்பிரிக்காவின் மொரெட்டேனியா கடற்கரையில் பிடிபட்ட முழு மீன்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மீன் எண்ணெய், நார்வேயின் மீன் பண்ணைகளில் எவ்வாறு தீவனமாக பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது.
 

ஐரோப்பாவில் பெரிய சில்லறை விற்பனையாளர்களால் விற்கப்படும் நார்வே வளர்ப்பு மீன்கள், மேற்குஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது என்று பத்திரிகை செய்தி கூறியது.
 

சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க அரசு மற்றும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஃபீட்பேக் குளோபல்’, "நார்வே மீன் பண்ணை தொழில்துறை அதிகபடியான கடல் மீன்களை பயன்படுத்துவதால், மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது, இது ஒரு புதிய வகை உணவு காலனித்துவத்தை உருவாக்குகிறது" என்று கூறியது.
 

பசுமை மாற்றத்தை விரும்பும் நார்வே


 

நார்வே அரசாங்கம் இந்த பிரச்னையில் அளித்த பதிலில் " சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தீவனம்’’ பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாக குறிப்பிட்டது. மேலும் ’’உள்ளூர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மூலப்பொருட்களை’’ அதிகளவு பயன்படுத்துவது குறித்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளது.
 

உண்மையில், நார்வே பசுமைப் பொருளாதாரத்திற்கான மாற்றத்தை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறது.
 

எனவே இந்த "பசுமை மாற்றத்திற்கு" இடமளிக்கும் வகையில் பெட்ரோலியத் தொழிலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்போது மீன் வளர்ப்பு தொழிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது.
 

இதன்மூலம், உணவு மற்றும் மருந்துக்கான கடற்பாசி உற்பத்தி மற்றும் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற எதிர்கால கடல்சார் தொழில்களுக்கு மூலதனம், உழைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
 

ஆனால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, நார்வேயின் லாபகரமான பெட்ரோலியத் தொழில்துறைக்கு எதிராக குரல் எழுப்பும் விமர்சகர்களை அமைதிப்படுத்த இது போதுமானதாக இருக்காது.
 

காலநிலை பிரசாரகர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக தொடர்ந்து துளையிடுவதை எதிர்க்கின்றனர். மற்ற விமர்சகர்கள் நார்வே அதன் எண்ணெய் வருவாயை அதிகம் நம்பியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
 

ஒருபுறம், எண்ணெய் மற்றும் எரிவாயு அடிப்படையிலான செல்வத்தால், நார்வேயின் வேலை நேரம், ஒப்பீட்டளவில் இதே பொருளாதாரத்தை கொண்ட மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது, எனவே நார்வேயின் தொழிலாளர் உரிமைகள் வலுவாக உள்ளது.
 

ஆச்சரியப்படத்தக்க வகையில், உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, நார்வே நீண்ட காலமாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது.
 

இருப்பினும், முதலீட்டாளரும் ஓய்வுபெற்ற ஹோட்டல் தொழிலதிபருமான போரே டோஸ்டெர்ட், ''நார்வே எண்ணெய் வருவாயை முழுமையாக நம்பியிருப்பதால், மிக அதிகளவிலான அரசு பட்ஜெட், விரிவாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.'' என்கிறார்
 

"இது நிலையான வளர்ச்சி அல்ல" என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
 

நார்வே போரில் லாபமீட்டுகிறதா?


 

நீண்ட காலமாக, நார்வே அதிகபடியாக பெருங்கடல்களை நம்பியிருக்கிறது. கடல்கள் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் ஆற்றலின் ஆதாரமாகவும், வேலை செய்யும் இடமாகவும், செல்வத்தை உருவாக்கும் ஆதாரமாகவும் உள்ளன.
 

1960 களின் பிற்பகுதியில்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து, ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாத நாடாக இருந்த நார்வேயின் அதிர்ஷ்டத்தை மாற்ற உதவியது.
 

அப்போதிலிருந்து, நார்வேயின் பெரும் எண்ணெய் வருமானம், நார்வேயின் மத்திய வங்கியின் ஒரு பகுதியாக இருக்கும் நோர்ஜஸ் வங்கியின் முதலீட்டு நிர்வாகத்தால் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
 

"எண்ணெய் நிதி" என்று அழைக்கப்படும் அதன் முக்கிய முதலீட்டு நிதியான 'அரசாங்க பென்ஷன் ஃபண்ட் குளோபல்', சுமார் 19,000 பில்லியன் குரோனர் ($1,719 பில்லியன்) மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளது.
 

ரஷ்யாவின் 2022 படையெடுப்பைத் தொடர்ந்து நார்வேயின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மேலும் அதிகரித்தது. போரினால் நாடு லாபம் ஈட்டுவதாக விமர்சகர்கள் கூறினர். குறைந்தபட்சம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் திடீர் லாபத்தை போதுமான அளவு பகிர்ந்துக் கொள்ளத் தவறிவிட்டது.
 

பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோர் போர் சூழலில் லாபமீட்டும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். நெருக்கடி காலத்தில் ஐரோப்பாவிற்கு தேவையான ஆற்றலை நார்வே வழங்கியது என்று குறிப்பிட்டார். நார்வே யுக்ரேனின் மிகப்பெரிய நிதி ஆதரவாளர்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 

நார்வே உள்ளூர் வங்கிகளின் கூட்டணியான ஈக்கா குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஜான் லுட்விக் ஆண்ட்ரியாசென், "நார்வே மக்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் பணக்காரர்களாகிவிட்டனர்" என்று கூறுகிறார்.
 

வெளிநாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் நார்வே உலகில் முன்னணியில் உள்ளது.
 

"நார்வே மக்கள் நல்ல காரணங்களுக்காக தாராளமாக நிதி அளிப்பவர்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார்.
 

எவ்வாறாயினும், யுக்ரேனில் ஏற்பட்ட மோதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நார்வேயின் கூடுதல் எண்ணெய் ஏற்றுமதிகளை சுட்டிக்காட்டும் ஆண்ட்ரியாசென், ''நார்வே தொண்டு செய்வதற்காக வழங்கப்படும் நன்கொடைகள் போர் மற்றும் துன்பங்களில் வாயிலாக எழும் கூடுதல் வருமானத்துடன் ஒப்பிடும்போது சிறிய அளவுதான்" என்று கூறுகிறார்.
 

பேராசிரியர் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுவது போல பல நார்வே மக்கள் குற்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கு அவர்கள் உடன்படுகிறார்களா?
 

"சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற சில விஷயங்களை தவிர, உண்மையில் அப்படி குற்றவுணர்ச்சி இருப்பதாக தெரியவில்லை" என்கிறார் ஆண்ட்ரியாசென்.
 

போரே டோஸ்டெர்ட் கூறுகையில் "எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை, நார்வேயில் பரவலாக குற்றவுணர்ச்சி இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை." என்றார்.