செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2022 (10:01 IST)

இலங்கை செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

இன்றைய (ஏப்ரல் 30) நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று ( ஏப்ரல் 30) இலங்கை செல்லவுள்ளதாக 'வீரசேகரி' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் இலங்கைக்கு செல்லும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயைச் சந்திக்கவுள்ளார்.
 
தொடர்ந்து மலையகத்திற்குச் செல்லவுள்ள அவர் அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
 
பின்னர், மே தினக் கூட்டத்தினை நிறைவு செய்து கொண்டு அண்ணாமலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை: வானிலை மையம்
நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. அதனால், குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் வியாழக்கிழமை 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. ஹரியாணா மாநிலம், குருகிராமில் இதுவரை இல்லாத அளவில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 1979, ஏப்ரல் 28-இல் 44.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
இதேபோல், டெல்லி, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ், மத்திய பிரதேச மாநிலத்தின், கஜூராஹோ, நெளகாங், காா்கோன் நகரங்கள், மகாராஷ்டிரத்தின் அகோலா, பிரம்மபுரி, ஜால்கோன், ஜாா்க்கண்ட் மாநிலம் தல்டோன்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் நாடு முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, குழந்தைகள், வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் . இந்தப் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
இலங்கையில் மருந்து பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரிப்பு
இலங்கையில் மருந்து பொருட்களின் விலைகளை 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக அரச வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது என்று 'தமிழ் மிரர்' செய்தி தெரிவித்துள்ளது.
 
சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய பெரசிட்டமோல்,அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.