புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:01 IST)

கொரோனா வைரஸ் பாதித்துள்ள இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இரானிலும் பரவியுள்ளதால், அங்கு சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கன்னியாகுமாரி மாவட்டம் ஆரோக்கியபுரம், இணையம், இணையம்புத்துறை மற்றும் இதர மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள்  ஒப்பந்த அடிப்படையில் இரான் நாட்டில் மீன்பிடிதொழில் செய்துவருகின்றனர்.
 
தற்போது இரானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை முற்றிலுமாக  நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதன்காரணமாக, அங்கு பணியில் உள்ள தமிழக மீனவர்கள் வெளியேற முடியவில்லை என மீனவ அமைப்பினர் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.
 
இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் அவலநிலையை கவனத்தில் கொண்டு மீனவர்கள் உடனடியாக தமிழகம் திரும்ப நடவடிக்கை தேவை என முதல்வர்  பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இரானில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர் என்றும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், பலர்  உடனடியாக தமிழகம் திரும்ப தயாராக உள்ளனர் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய தமிழக மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம், பொதுச்செயலாளர் ஆண்டோ லெனின்.
 
''இரானில் பல கடற்கரை பகுதியில் தங்களது வசிப்பிடங்களில் மீனவர்கள் தங்கியுள்ளார்கள். அவர்கள் பணிக்கும் போகவில்லை. மருத்துவ வசதிக்காக  காத்திருக்கிறார்கள், சரியான உணவுவசதி இல்லை என்கிறார்கள். அவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவரவேண்டும்,'' என்கிறார் ஆண்டோ லெனின்.