புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:28 IST)

பாலியல் வல்லுறவு செய்த பாதிரியாரை திருமணம் செய்ய அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம் - என்ன பின்னணி?

தன்னை பாலியல் வன்புணர்வு செய்த கத்தோலிக்க முன்னாள் பாதிரியாரை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரிய பெண்ணுக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த முடிவை தேவாலய உறுப்பினர்களும், பெண்ணிய இறையியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.

கேரளாவின் கொட்டியூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், முன்னாள் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் வினீத் சரண், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

2016ஆம் ஆண்டில் வயநாடு மாவட்டத்தில் உள்ள தேவாலய பள்ளியில் சம்பந்தப்பட்ட பெண் படித்து வந்தார். குற்றம்சாட்டப்பட்ட 56 வயது பாதிரியார் அதே பள்ளியில் பணியாற்றினார்.

இந்த நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை காலத்தை அவர் தற்போது அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, அந்த சிறுமிக்கு ராபின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது.

"இந்த உத்தரவின் மூலம் சட்டத்தின் மீதான நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் அதிகரிக்கச் செய்துள்ளது. இத்தகைய விவகாரம் வெளிப்படும்போது 'தேவாலயம் அவதூறுக்கு உள்ளாகும்' என்று நினைக்கும் திருச்சபைக்குள் உள்ள அனைவருக்கும் இது ஒரு அடியாகும். உண்மையில் இதற்கு நேர்மாறாகவே நடந்திருக்கிறது," என ஜலந்தரின் பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய பாதிரியார் அகஸ்டின் வாடோலி பிபிசியிடம் கூறினார்.

இந்த நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் இப்போது 'பெரியவர்' (பதின்ம வயதை கடந்து விட்டார்) ஆகிவிட்டார் என்று முன்னாள் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தனது குழந்தையின் பள்ளி சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே பாதிரியாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று மனுவில் அவர் கூறியிருந்தார். எனவே, பாதிரியாரை திருமணம் செய்ய ஏதுவாக அவரது தண்டனையை ரத்து செய்யுமாறும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்ற முடிவு குறித்து பெண்ணிய இறையியலாளர் கொச்சுராணி ஆபிரகாம் பிபிசியிடம் கூறுகையில், "கடவுளுக்கு நன்றி, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது, அது அனுமதிக்கப்பட்டிருந்தால், தவறான முன்னுதாரணம் உருவாகி இருக்கும்," என தெரிவித்தார்.

இந்த விஷயம் வெளியானது எப்படி?

பாதிக்கப்பட்ட 16 வயது இளம்பெண், புனித செபாஸ்டியன் தேவாலயத்துடன் இணைந்த கொட்டியூர் ஐஜேஎம் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். அவரது குடும்பத்தினர் இந்த தேவாலயத்தில் உறுப்பினராக இருந்தனர். தேவாலயத்தில் கணினியில் தரவை உள்ளீடு செய்யவும் அவர் உதவி வந்தார்.

2016ஆம் ஆண்டு மே மாதம், தேவாலயத்தின் அப்போதைய விகார் ராபின் வடக்கஞ்சேரி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

ராபின் வடக்கஞ்சேரியின் மிரட்டல்கள் காரணமாக சிறுமி, தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் கூறினார். கண்ணூரில் உள்ள சைல்டு லைனுக்கு பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து வந்த அழைப்பு மூலம் ராபின் வடக்கஞ்சேரி பற்றித் தெரியவந்தது.

"எங்களுக்கு இந்த பெயர் குறிப்பிடாத அழைப்பு வந்தது. நாங்கள் விசாரித்தோம். விசாரணையில் அந்த பெண் தன் உறவினர் மற்றும் பின்னர் தனது சொந்த தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியது தெரியவந்தது." என சைல்ட்லைன் நோடல் அதிகாரி அமல்ஜித் தாமஸ் பிபிசியிடம் கூறினார்.

வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் இருந்தன. எனவே, அந்த பெயர் குறிப்பிடாத அழைப்பு குறித்து நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.

குடும்பம் ஏழ்மையானது என்றும் அவர்கள் வடக்கஞ்சேரியுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தனர் என்றும் தாமஸ் கூறினார். பின்னர் நடந்த டிஎன்ஏ சோதனையில் அந்த குழந்தை அப்போதைய விகார் ராபின் வடக்கஞ்சேரியினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

போக்சோ POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி பிஎன் வினோதின் தீர்ப்பை,கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்கு ஈடாக தண்டனையை நிறுத்த கோரும் ராபின் வடக்கஞ்சேரியின் விண்ணப்பத்தை ஏற்க கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் தாமஸ், மறுத்துவிட்டார்.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை உறுதி செய்தது.

தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமா?

"திருமணம் தண்டனையை நிறுத்துவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது. குழந்தையின் தந்தையின் பெயரை பள்ளி சேர்க்கையில் பதிவு செய்ய, திருமணமே தேவையில்லை. டிஎன்ஏ சோதனை அவர்தான் தந்தை என்று ஏற்கனவே நிரூபித்து விட்டது. இந்த முயற்சி குற்றவாளியை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக மட்டுமே என்பது தெளிவாகிறது," என கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜு பிபிசியிடம் கூறினார்.

ராபின் இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது ​​சந்தியா ராஜு, மும்பையில் உள்ள மஜ்லிஸ் அமைப்பு, புனேயின் ஸ்த்ரீவாணி, ஆலோசகர் கவிதா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆர்வலர் பிரைனல் டிசோசா ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

"இந்த கோரிக்கையை ஏற்க,பாதிரியாரும் தேவாலயமும் அந்தப்பெண் மற்றும் குடும்பத்தின் மீது நெருக்குதல் கொடுத்தனர் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. அவர்கள் முழு வழக்கிலும் கொடுத்த அச்சுறுத்தல்கள் கற்பனை செய்ய முடியாதவை. தனது தந்தை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளிக்க சிறுமி கட்டாயப்படுத்தப்பட்டார். குழந்தையை தத்து கொடுக்கவும் முயற்சி செய்யப்பட்டது," என சந்தியா ராஜு விளக்குகிறார்.

மறுபுறம் இது ஒரு தனி நபர் விஷயம் என்று தேவாலயம் தெளிவுபடுத்தியது.

"தேவாலயம் ஏற்கனவே பாதிரியாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது,"என கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (KCBC) செய்தித் தொடர்பாளர் பாதிரியார் ஜேக்கப் பலாக்கப்பள்ளி, பிபிசியிடம் கூறினார்,

"இது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட விஷயம். தேவாலய விவகாரம் அல்ல. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை அதன் உறுப்பினர்கள் எவருக்கும் எதிரான எந்தவொரு குற்றத்தையும் ஏற்கவோ ஆதரிக்கவோ இல்லை. அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். தேவாலயத்திற்கும் இந்த விஷயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. " என அவர் மேலும் தெரிவித்தார்.

தேவாலயம் மீதான தாக்கம்

"கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த எவரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இது தேவாலய வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. தேவாலயம் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்னுரிமை தருகிறது என்ற கருத்துக்கு இது வழிவகுத்தது,"என்று பெண்ணிய இறையியலாளர் கொச்சுராணி ஆபிரகாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

"திருமணம் ஒரு தீர்வாக இருக்க முடியாது. இது போன்ற பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தேவாலயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய பாதிரிகளை இடமாற்றம் செய்வதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,". என்று அவர் கூறுகிறார்.

"நான் சொல்வது அனைத்து மதங்களின் பூசாரிகளுக்கும் பொருந்தும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அவர்களின் தார்மீக தலைமை கேள்விக்குள்ளாகும். தேவாலயம் அதை மூடிமறைப்பதை நிறுத்த வேண்டும்." என ஆபிரகாம் கூறுகிறார்,

'குற்றம் நடந்தால், அந்த நபர் தண்டிக்கப்பட வேண்டும்' என்று பாதிரியார் அகஸ்டின் நம்புகிறார். பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் போதும் இவரது நிலைப்பாடு இதுதான். பல வருடங்களாக கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் முலக்கல் மீது வழக்கு நடைபெறுகிறது.

"தவறு செய்த நபர் தண்டிக்கப்பட்டால், தேவாலயத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். தண்டனை வழங்கப்படாவிட்டால், தார்மீக ரீதியாக தெவாலயத்தின் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும். இது மனிதகுலம், இயேசு கிறிஸ்து மற்றும் திருச்சபைக்கு எதிரான குற்றம்" என்றார் அவர்.