செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:28 IST)

பிளாஸ்டிக் தின்னும் பூஞ்சை - சுற்றுச்சூழலுக்கு இது பயன் தருமா?

தன் நிறுவனத்துக்காக சமந்தா ஜென்கின்ஸ் பூஞ்சைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பூஞ்சை செய்த செயல் அவரது கவனத்தை ஈர்த்தது.

"தானியங்கள் நிறைந்த கண்ணாடிக் குடுவையிலிருந்து ஒரு காளான் முளைத்து எழுந்தால் எப்படி இருக்கும்? அப்போது அது பெரிய அதிசயமாகத் தெரியவில்லை. ஆனால் அந்த பூஞ்சை அடுத்து செய்த வேலை ஆச்சரியமானது" என்கிறார் சமந்தா. பயோம் என்கிற உயிரியல் நிறுவனத்தில் உள்ள முதன்மை உயிரித் தொழில்நுட்பவியலாளர் இவர்.

இந்த குடுவையை ஒரு ப்ளாஸ்டி பஞ்சால் மூடி வைத்திருந்தார்கள். அந்தப் பஞ்சைத் தின்றுவிட்டு பூஞ்சை வெளியில் வந்துவிட்டது. உயிரியல் அடிப்படையில் காப்பிடுத் தகடுகள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில், முற்றிலும் புதிய ஒரு வழியை இந்தப் பூஞ்சை திறந்துவைத்திருக்கிறது. இப்போது இந்தப் பூஞ்சையை இன்னும் செயல்திறன் மிக்கதாக மாற்றி, ப்ளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்று பயோம் ஆராய்ந்து வருகிறது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கிப் போடும் ப்ளாஸ்டிக் ஒரு பெரிய பிரச்னையாக உருமாறியிருக்கிறது. 2015ம் ஆண்டு வந்த க்ரீன்பீஸ் அறிக்கை, இதுவரை 6.3 பில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. அதில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது, மற்ற எல்லா கழிவுகளும் எரிக்கப்படுகின்றன அல்லது குப்பைமேடுகளில் சேர்க்கப்படுகின்றன.

இந்த நிலை இப்போது சற்றே முன்னேறியிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் 40% ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 2025க்குள் இது 50%ஆக அதிகரிக்கும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஆனாலும், தண்ணீர் பாட்டில்கள் செய்ய உதவும் பாலி எத்திலீன் டெரிதாலேட் (PET - பெட்) போன்ற சில வகை ப்ளாஸ்டிக்குகளை வழக்கமான முறைகளை வைத்து மறுசுழற்சி செய்ய முடியாது. இதுபோன்ற சூழலில் உயிரியல் முறைகள் நல்ல தீர்வைக் கொடுக்குமா?
பெட் மற்றும் பாலியூரிதேன் வகை பிளாஸ்டிக்குகளின்மீதும் தன் பூஞ்சையை ஜென்கின்ஸ் பரிசோதித்துப் பார்த்தார். "நீங்கள் பிளாஸ்டிக்கை உணவாகக் கொடுத்தால் பூஞ்சைகள் அதை சாப்பிட்டுவிட்டு இனப்பெருக்கம் செய்து மேலும் பூஞ்சைகளை உருவாக்குகின்றன. அதன்பிறகு அதிலிருந்து நாம் உணவுக்காகவோ தீவனத்துக்காகவோ ஆன்டிபயாட்டிக் உருவாக்கவோ பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.

வேறு சிலரும் இந்த முயற்சியில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

பெட் பிளாஸ்டிக்கிலிருந்து கிடைக்கும் ஒரு மூலக்கூறான டெரிதாலிக் அமிலத்தோடு வேதிவினை புரியும் ஒருவகை ஈ.கோலை பாக்டீரியாவை மரபணு மாற்ற தொழில்நுட்பம் மூலமாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியா, டெரிதாலிக் அமிலத்தை சுவையூட்டியான வெனிலினாக மாற்றுகிறது.

"இந்த ஆய்வு இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இதன் செயல்திறனை அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் இன்னும் பல வழிகள் கண்டுபிடிக்கப்போகிறோம்" என்கிறார் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையைச் சேர்ந்த முனைவர் ஜோனா சாட்லர்.

"ஆனால் இதன் ஆரம்பகட்டமே சுவாரஸ்யமானதுதான். அடுத்தடுத்த மேம்பாடுகள் நடந்தபிறகு இது எதிர்காலத்தில் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும்" என்கிறார்.

லெய்ப்ஸிக்கைச் சேர்ந்த ஹெம்ஹோல்ட்ஸ் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, பாலியூரிதேனை சாப்பிடக்கூடிய பாக்டீரியாவைக் குப்பை மேட்டிலிருந்து கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு சூடோமோனாஸ் TDA1 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பிடும் ப்ளாஸ்டிக்கில் பாதி அளவை உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த பாக்டீரியா பயன்படுத்திக்கொள்கிறது. மீதி அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவாக வெளியேற்றப்படுகிறது.

இந்த பாக்டீரியா நொதிகள் மூலமாக ப்ளாஸ்டிக்கை உடைக்கிறது. இந்த நொதிகளை உருவாக்கும் மரபணுக்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற முறைகள் குறைவான செலவில் பயன்பாட்டுக்கு வருமா என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

"பெட் பிளாஸ்டிக்கை நொதிகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் மூலமாகவும் உடைக்கும் அறிவியலில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடக்கவேண்டும். ஆனாலும் இப்போது இருக்கிற, தண்ணீரை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பங்களோடு இவை போட்டி போடவேண்டியிருக்கும்" என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரமணி நாராயண்.

இப்போதைக்கு கார்பயோஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனம் இதில் அதிகபட்ச வெற்றியை எட்டியிருக்கிறது. பெட் பிளாஸ்டிக்கை உடைக்கும் ஒரு நொதியை இயற்கை உரத்திலிருந்து எடுத்து இவர்கள் பயன்படுத்துகிறார்கள். லோரியல், நெஸ்லே உள்ளிட்ட பெரிய நிறுவனங்களோடு இணைந்து பணிபுரிந்தபின்பு, இந்த நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக நொதிகளால் மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக்கால் ஆன பெட் பாட்டில்களைத் தயாரித்திருக்கிறது.

மற்ற மறுசுழற்சி முறைகளோடு ஒப்பிடும்போது, பெட் பாட்டில்களில் செயற்கை நிறம் சேர்க்கபட்டாலும் இது வேலை செய்யும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

"வழக்கமான மறுசுழற்சி முறைகளில், உங்களுக்கு நிறமில்லாத பெட் பாட்டில்கள் வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் நிறமில்லாத பெட் பாட்டில்களைத்தான் மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆனால் எங்களது முறையைப் பயன்படுத்தினால் எந்த பெட் பாட்டிலையும் எந்த பெட் ப்ளாஸ்டிக் பொருளாகவும் மறுசுழற்சி செய்யலாம்" என்கிறார் நிறூவனத்தின் துணைத்தலைவர் மார்டின் ஸ்டீபன்.

பொதுவாக பெட்ரோலிய வேதிப்பொருட்களால் உருவாக்கப்படும் பாட்டில்களை விட இவை இரண்டு மடங்கு கூடுதல் விலை கொண்டவை. ஆனாலும் அடுத்தடுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் வழக்கமான விலைக்கே இந்த பாட்டில்களைத் தரும் அளவுக்கு ஒரு செய்முறையைக் கொண்டு வர முடியும் என்று மார்ட்டின் நம்புகிறார்.

"ஒவ்வொரு நொதியும் ஒரு குறிப்பிட்ட பிளாஸ்டிக்கின்மீது மட்டும்தான் வேலை செய்யும். ப்ளாஸ்டிக் அழுக்காக இருந்தாலும் அவை செயல்புரியும். குறைவான ஆற்றல் இருந்தாலும் போதும். இதை தேவைக்கேற்றவாறு பெரிய அளவிலோ சிறிய அளவிலோ செய்துகொள்ள முடியும். இதனால் குறைவான கரிம கால்தடம் மட்டுமே ஏற்படுகிறது. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் வளர்ந்த நாடுகளிலும்கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்" என்கிறார் லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வேதியியல் துறையைச் சேர்ந்த முனைவர் வுஃல்ப்கேங் சிம்மர்மேன்.

"ஆனால் இதுவே முழு தீர்வு கிடையாது. பெட் பாட்டில்களில் நொதிகள் வேலை செய்ய வேண்டுமானால் அவற்றின் படிகத்தன்மையை உடைக்க முதலில் வெப்பத்தால் பாட்டில்களை உருக்குவார்கள். அதற்கு நிறைய ஆற்றல் வீணாகும். அதன்பிறகுதான் நொதி வேலை செய்யும். ஆகவே இந்த செய்முறையின் ஒட்டுமொத்த கரிம கால்தடமும் செலவும் அதிகமாகிறது என்று நினைக்கிறேன்" என்கிறார்.

"இரண்டு பாலியஸ்டர்களுக்கு மட்டுமே நாங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக உலகில் தயாரிக்கப்படும் 350 மில்லியன் டன் ப்ளாஸ்டிக்கில் இவற்றின் விகிதம் 75 மில்லியன் டன் மட்டுமே,இன்னும் வேலை பாக்கியிருக்கிறது" என்கிறார் ஸ்டீபன்.