வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:42 IST)

ஷில்பா ஷெட்டி: "ராஜ் குந்த்ரா வழக்கில் சட்டம் கடமையை செய்யட்டும் - அந்தரங்கத்துக்கு மதிப்பு கொடுங்கள்"

ஆபாச காணொளி தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ராஜ் குந்த்ரா மீதான வழக்கில் சட்டமும் காவல்துறையும் அதன் கடமையைச் செய்யட்டும். இந்த விவகாரத்தில் எங்களுடைய தனி உரிமை அந்தரங்கத்துக்கு மதிப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஹாட்ஷாட்ஸ் என்ற லண்டனைச் சேர்ந்த செயலியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அதை ஓடிடி படத்தயாரிப்புக்கும் ஆபாச இணையதளங்களுக்கும் விற்றதாக ராஜ் குந்த்ரா மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த ஆபாச படங்கள் விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டது முதல் ஊடகங்களிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார் ஷில்பா ஷெட்டி.

காவல்துறை விசாரணைக்கு மறுதினம், "என்னுடைய வாழ்வில் இதுநாள்வரை பெருந்துன்பங்களைக் கடந்து ஏச்சு, பேச்சுகளைக் கடந்து சவால்களை எதிர்கொண்டு எப்படி வாழ்ந்தேனோ, அதுபோலவே வாழ்வேன்," என்று தனது சமூக ஊடக பக்கத்தில் ஷில்பா ஷெட்டி கூறியிருந்தார். ஆனால், ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவோ அது குறித்து தமக்கு என்ன தெரியும் என்பதைப் பற்றியோ அவர் தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவில் தமது ட்விட்டர் பக்கம் மூலம் ராஜ்குந்த்ரா வழக்கு தொடர்பான தமது மனநிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

அதில் அவர், "கடந்த சில நாட்கள், எனக்கு ஒவ்வொரு மட்டத்திலும் மிகவும் சவாலானதாக இருந்தன. பல வதந்திகள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. என்னைப்பற்றி பொருத்தமற்ற ஊகங்களை ஊடகங்களும் நலம் விரும்பிகளும் கூட கிளப்பினர்."

"ஏராளமாக ட்ரோலிங் செய்யப்பட்டன. நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன. அவை என்னை மட்டுமின்றி எனது குடும்பத்தாரையும் இலக்கு வைத்தன."

"இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு: இதுவரை நான் கருத்து வெளியிடவில்லை என்பதுதான். அப்படி நான் பேசினால் அது நீதிமன்ற விசாரணைக்கு புறம்பானதாக அமையலாம். அதனால் அப்படி கருத்து வெளியிடுவதை நான் தவிர்க்கிறேன். எனவே. தயவு செய்து எனது சார்பாக, நான் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்."

"ஒரு திரை பிரபலமாக நான் ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறேன். எப்போதும் யார் மீதும் புகார் சொல்லக்கூடாது. விளக்கமும் தரக்கூடாது. அந்த வகையில், இது விசாரணை நிலுவையில் உள்ள விவகாரம். மும்பை காவல்துறை மீதும் இந்திய நீதித்துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பமாக எங்களுக்கு உள்ள எல்லா சட்ட வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்."

"ஆனால் அதுவரை குறிப்பாக ஒரு தாயாக உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன். எங்களுடைய தனி உரிமை அந்தரங்கத்தை எங்களுடைய குழந்தைகளுக்காக மதியுங்கள். எந்தவொரு தகவலையும் சரிபார்க்காமல் அது பற்றி கருத்து தெரிவிப்பதை தவிருங்கள்."

"நான் சட்டத்துக்கு அடிபணிந்து நடக்கும் குடிமகள். கடந்த 29 ஆண்டுகளாக தொழில்முறையாக பணியாற்றுபவள். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு எப்போதும் தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன். எனவே குறிப்பாக இதுபோன்ற நேரத்தில் எனது குடும்பத்தார் மற்றும் எனது அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை பேணப்படுவதை மதியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஊடக விசாரணைக்கு நாங்கள் உகந்தவர்கள் அல்ல. தயவு செய்து சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். சத்யமேவ ஜெயதே," என்று கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.

ராஜ் குந்த்ரா வழக்கு என்ன?

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த ஜூலை 20ஆம் தேதி ஆபாச பட தயாரிப்பு வழக்கில் கைதானார். அவருடன் ரயான் தார்ப் என்பவரும் கைதாகி தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்யும் கும்பலை மும்பை காவல்துறை கைது செய்தது. அந்த கும்பலின் பின்னணி தொடர்பான விரிவான விசாரணையின்போதே ராஜ் குந்த்ரா தரப்பு ஹாட்ஷாட்ஸ் செயலியை நிறுவி அதில் ஆபாச படங்களை பதிவேற்றி விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா போலீஸ் காவலில் இருந்தபோது அவரிடம் ஏழு முதல் எட்டு மணி நேரம்வரை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் அங்கமாக ராஜ் குந்த்ராவை அவர் வசித்து வந்த வீட்டுக்கு காவல்துறையினர் அழைத்து வந்தபோது, அங்கு ஏற்கெனவே விசாரணைக்காக வரவழைக்கப்பட்டிருந்த ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கும் ஹாட்ஷாட்ஸ் செயலி நிறுவப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் காவல்துறையிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அது குறித்து ஷில்பா ஷெட்டி எந்த கருத்தையும் கூறவில்லை. இதற்கிடையே, ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் விரிவான தகவல்களை காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது.

பாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி அறியப்படுவதால் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கைது விவகாரம் மற்றும் அவர் தொடர்பரான தகவல்கள் தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்களாலும் ரசிகர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.