வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (20:02 IST)

பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு குப்பைகளுக்குள் மறைத்து மனித உடல் பாகங்கள் அனுப்பப்பட்டதா - தொடங்கியது விசாரணை

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் கொள்கலன்களில் மனித உடற்பாகங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கொள்கலன்களிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, கொள்கலன்களை திறந்து பார்த்த சந்தர்ப்பத்தில், கொள்கலன்களில் பெருமளவு கழிவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவமானது, இலங்கையில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், பிரிட்டனில் இருந்து இந்த கொள்கலன்கள் வந்துள்ளதை கண்டறியந்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளிட்ட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், பிரிட்டன் அரசும் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கொள்கலன்களில் மருத்துவ கழிவுகள், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான கழிவுகள் காணப்படுவதாக முன்னர் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த கொள்கலன்களில் மனித உடற்பாகங்கள் காணப்படுவதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஊடகம் புதன்கிழமை பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த ஊடக தகவலை அடுத்து, இந்த விடயத்தை மேலும் பெரிய நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க பகுதியிலுள்ள தனியார் கிடங்குகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களில் மனித உடற்பாகங்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு

இந்த கழிவுகளில் மனித உடற்பாகங்கள் மற்றும் ரத்த கறைகள் காணப்படுவது தொடர்பாக ஆய்வுகளை நடத்தவுள்ளதாக அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.

அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான பிபிசி தமிழிடம் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை நடத்த விசாரணை நடத்தும் தரப்பால் தமக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான ஆய்வுகளை நடத்தும் வகையிலான முதற்கட்ட ஆலோசனைகளை விசாரணை நடத்தும் தரப்பிற்கு தான் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கழிவுப் பொருட்களில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான மாதிரிகளை தமக்கு வழங்கும் பட்சத்தில், அது குறித்து ஆய்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், அதற்கான தயார் நிலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆய்வுகள் எப்போது நிறைவடையும் என்ற கேள்விக்கு, கழிவுப் பொருட்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளின் அளவிற்கு அமைய, தமது ஆய்வுகளை நடத்தும் கால எல்லை நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தம்மால் இயன்ற அளவு விரைவில் இந்த ஆய்வுகளை நடத்தி, உரிய தரப்பிற்கு தமக்கு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜயமான நம்பிக்கை வெளியிட்டார்.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள்

பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமான முறையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த கொள்கலன்களில் பெரும்பாலும் மெத்தைகள் காணப்படுகின்றதுடன், மெத்தைகளுக்குள் மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட இந்த கழிவுகள், கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் ஆகியவற்றில் இறக்க வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆராயப்பட்டு, கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனத்தின் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் உள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த கழிவுகளில் உள்ள நல்ல பொருட்களை எடுத்துவிட்டு, அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் வகையிலேயே இவை கொண்டு வரப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.