1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (13:31 IST)

இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா?

srilanka
இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் மாளிகை ஒரு அருங்காட்சியகம் போல் இருந்தது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை பார்ப்பதற்காக கொழும்பு மற்றும் வெளி நகரங்களில் இருந்து வந்த இலங்கை மக்கள் ஒன்றரை கிலோமீட்டர் வரை நீண்டிருக்கும் வரிசையில் அமைதியாக காத்திருக்கின்றனர்.
வந்தவர்களில் சிங்களர்கள், தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

அங்கு நான் குணசேகராவை சந்தித்தேன். அவர் கையில் ஒரு சிறு குழந்தையும் இருந்தது. "இங்கே நிற்கும் நாங்கள் அனைவரும் இலங்கையின் குடிமக்கள். மதம், சாதி, வரலாறு அனைத்தும் இனி புதிய முறையில் எழுதப்படும்" என்றார் அவர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தீர்வதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படாத நிலையில், இங்குள்ள சமூக மற்றும் மத உறவுகளில் ஒரு தனித்துவம் காணப்படுகின்றது என்பதே யதார்த்தம். அதுதான் அதிகாரத்தில் இல்லாத ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான ஒற்றுமை.

மத்திய கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு அழகான ஏரியின் கரையில் ஒரு பெரிய புத்தர் கோவில் உள்ளது.

இரண்டேகால் கோடி மக்கள்

சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வாரந்தோறும் இந்த புத்தர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

ஆனால் இப்போது கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும்தெரியாத இடத்தில் வசித்து வருகிறார்.

விலைவாசி உயர்வு, உணவு மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் அலுவலகம் முதல் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். தற்போது இந்த கட்டடங்கள் காலி செய்யப்பட்டுவிட்டன.

இலங்கையின் இரண்டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர்,பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
 

'நாட்டில் நிலவிய வெறுப்புணர்வு'

ஏறக்குறைய எல்லா முந்தைய அரசுகளும் பெரும்பான்மை வகுப்பினரின் நலன்களைக் கவனித்தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

தமிழர் உரிமைகளுக்கான உள்நாட்டுப் போர் பல தசாப்தங்களுக்கு நீடித்தது. 2009ல், அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் அதை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையை பெற்றனர்.

உடனடியாக நடந்த தேர்தல்களில், சிங்கள தேசியவாதத்தின் மீது சவாரி செய்து ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. "இந்த தேர்தலில் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றுவிடுவேன் என்று எனக்குத்தெரியும்," என்று தனது வெற்றிக்குப் பிறகு கோட்டாபய கூறினார்.

"நாட்டில் பரஸ்பர பிரிவினை சூழல் நிலவியது உண்மைதான். 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போரும் இதற்கு காரணமாக அமைந்தது. அரசியலுக்காக மனிதன் அல்லது மதம் பயன்படுத்தப்படுகிறது."என்று கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபோதி கோவிலின் தலைமை பூசாரி யதகாம ராகுல் கூறினார்.

"நாங்கள் மதத்தை விட மனித நேயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். எந்த ஊருக்கு சென்றாலும் பௌத்த குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தால், அதற்கு அருகில் முஸ்லிம் குடும்பம், எதிரே தமிழ் குடும்பம் இருக்கும். நாடு மேலும் முன்னேற வேண்டுமானால், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்,"என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் மதவாத பதற்றங்கள் அதிகரித்து வந்தன. 2019 ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புகளில் 250 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
 

நிலைமை மாறும் என்ற நம்பிக்கை

இந்த தாக்குதலுக்குப்பின்னால் ஐஎஸ் அமைப்பின் சில உள்ளூர் பிரிவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது என இங்கு வாழும் பல தமிழ் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

"நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அது மேலும் அதிகரித்தது. முஸ்லிம் சமூகத்திற்கும் அந்தத் தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற நாங்கள் குறிவைக்கப்பட்டோம்,"என்று கொழும்பில் உள்ள அக்பர் ஜும்மா மசூதியின் இமாம் ரிஃப்கான் கூறுகிறார்.

"கோவிட் வந்த பிறகு இறந்தவர்களை புதைக்க ராஜபக்ஷ சகோதரர்கள் அனுமதிக்கவில்லை. உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்."என்று அவர் மேலும் கூறினார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக இருந்த 'கால் ஃபேஸில்' நான் அஷ்ஃபக் என்ற கல்லூரி மாணவரை சந்தித்தேன்.

"முந்தைய அரசுகள் மாணவர் சேர்க்கையில்கூட முஸ்லிம்களின் சதவிகிதத்தை குறைவாக வைத்திருந்தன. இப்போது நிலைமை மேம்படக்கூடும்," என்கிறார் அவர்.

கணிசமான சிங்கள மக்கள் தங்களை எதிர்பார்கள் என்று சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்திய ராஜபக்ஷ குடும்பம் எதிர்பார்க்கவில்லை.

தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை சமூகத்தை 'வெளியாட்கள்' என்று கண்மூடித்தனமாக கருதிய பலரும்அதில் இருந்தனர்.

'நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்'

குமாரா பரேரா செல்போன் கடை நடத்திவருகிறார்."நாட்டின் நிலை இப்படியாகிவிட்டதே" என்று அவர் வேதனைப்படுகிறார்.

"இலங்கையில் தமிழர் உரிமைக்காக உள்நாட்டுப் போர் நடந்தது. அது புரிகிறது. அதன்பிறகு நாட்டில் அமைதி திரும்பியது. அதுவும் புரிகிறது. ஆனால் திடீரென்று ஒரு விசித்திரமான தேசியவாதம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் பலர் இதை சரியானது என்று கூட கருதியிருக்கலாம். ஆனால் உணவு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் மக்கள் அதைப் பற்றி சிந்திப்பதுகூட இல்லை,"என்கிறார் அவர்.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தில் ராணுவத்தின் நிலைப்பாடும் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

ராணுவத்தில் உள்ள பெரும்பாலான வீரர்கள் மற்றும் தளபதிகள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் இதுவரை போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை மிகவும் சாதாரணமாகவும், மென்மையாகவும் இருக்கிறது.

"நாட்டில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் அரசியல் ஆய்வாளர் பவனி ஃபொன்சேகா கூறுகிறார்.

"மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சமூகங்கள் மத்தியில் மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக, பரஸ்பர கருத்து, உரையாடல் மற்றும் விவாதம் ஆகியவற்றின் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டு, பிரச்சனைகளை தீர்க்கமுடியும்," என்று அவர் குறிப்பிட்டார்.