திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:40 IST)

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் வன்முறை: 20 போலீசார் காயம் - காவல்துறை

Kallakurichi
கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை தவறானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனாலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினர் தடுப்பை மீறி‌ பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறுமுனையில் இருந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்க தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதில் போலீசார் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தை கற்களை கொண்டு போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்," என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பிற மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பள்ளியின் உள்ளே போராட்டக்காரர்கள் புகுந்து பள்ளியின் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வாகன கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவலர்கள் பாதுகாப்பாக அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போலீஸார் தடியடி மற்றும் மற்றும் போராட்டக்காரர்கள் தாக்குதலால் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் போது காவல் துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பள்ளி பேருந்துகளையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கலவரம் தீவிரமடையும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதல் பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

டிஜிபி எச்சரிக்கை

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, "போராடுபவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "கள்ளக்குறிச்சி எஸ்.பி. தலைமையில் இந்த விவகாரத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், பள்ளிக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் தடுக்க முயன்றும் போராட்டக்காரர்கள் காவலர்களை தாக்கி, காவல் வாகனங்களை தாக்கி, பள்ளியை சேதப்படுத்தியுள்ளனர். காவலர்கள் எத்தனை பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. எனினும் காவல்துறையினர் அங்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டும் இரண்டு ஆசிரியர்களையும் உடனடியாக கைது செய்ய முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்றில்லை என்றாலும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.