1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (15:45 IST)

காக்பிட்டில் கொட்டிய காஃபி: பாதியில் தரையிறங்கிய பயணிகள் விமானம்!

பயணிகள் விமானம் ஒன்றின் காக்பிட்டில் இருக்கும் கன்ட்ரோல் பேனலில் காஃபி சிந்தியதால், விமானம் தரை இறக்கப்பட்டது. 
 
பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், இப்போதுதான் இதை அவர்கள் பொது வெளியில் தெரிவித்துள்ளனர். அந்த விமானம் ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரில் இருந்து மெக்சிகோவின் கான்குன் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
 
விமானம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது மேல் மூடி இல்லாத குவளை ஒன்றில் காஃபி பரிமாறப்பட்டுள்ளது. அதை தலைமை விமானி தனது டிரேயில் வைத்துள்ளார். பின்னர் அதை தெரியாமல் தட்டிவிட்டுள்ளார்.
குவளையில் இருந்த காஃபி பெரும்பாலும் விமானியின் மடியில் சிந்தினாலும், சிறிதளவு கண்ட்ரோல் பேனல் மீது சிந்தியுள்ளது. காஃபி சிந்தியதால் தரைக் கட்டுப்பாடு அறைகளுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
 
அதோடு காஃபியின் சூட்டால் விமானியின் ஆடியோ கண்ட்ரோல் பேனல்கள் உருகத் தொடங்கியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காக்பிட்டில் புகை உண்டாகியுள்ளது. விமானிகள் உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பயன்டுத்தியுள்ளனர்.
 
இதனால் அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷெனான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.