செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:34 IST)

சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது

ஆடு மேய்க்கும் தலித் தொழிலாளியை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் 55 வயதாகும் பால்ராஜ். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார்.

கடந்த, 8ஆம் தேதி கண்மாய்க்குள், வெவ்வேறு நபர்களின் ஆடுகள் மந்தையாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஓலைகுளம் தெற்குத் தெருவை சேர்ந்த சிவசங்கு என்பவரின் மந்தைக்குள் பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, சென்று விட்டது என்று பால்ராஜ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கி அனைவர் முன்னிலையில், பால்ராஜை, சிவசங்கு காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க செய்தனர்.

சிவசங்கு காலில் விழுந்து பால்ராஜ் மன்னிப்பு கேட்கும் காணொளியை சிவசங்குவின் உறவினர்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதையறிந்த பால்ராஜ், 11ஆம் தேதி மாலை கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகார் மனுவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தம்மை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்ததோடு, அதை சமூக வலைத்தளங்களிலும் பரப்பியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கயத்தாறு போலீசார், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து இன்று (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,"கயத்தாறு பகுதியை சேர்ந்த பால்ராஜ், சிவசங்கு இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஆடு மேய்த்ததில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது."

"இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்ட பகுதிக்குள் சென்றதால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து அவரது காலில் மூண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார்.

கடந்த 11ஆம் தேதி மாலை பால்ராஜ் புகார் அளித்தார். அன்று இரவே கயத்தாறு ஓலைகுளம் சிவசங்கு, மகன், மகள் உள்ளிட்ட ஏழு பேர் மீது கயத்தாறு போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், சாதிப் பெயரை சொல்லித் திட்டுதல், காலில் விழ வைத்து வன்கொடுமை செய்தல், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புதல் உள்ளிட்டகுற்றச்சாட்டுகளுக்காக எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழு பேரையும் கைது செய்தனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார்.